சென்னை: தமிழ்நாடு அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு  காரணமாக தமிழகத்தில் 8 தொகுதிகள் குறையும்  வாய்ப்பு உள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். இதுதொடர்பாக  மொத்தம் 45 கட்சிகளுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் தொகுதிகள் குறையாது என மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

ஆனால், அதை ஏற்க மறுக்கும் தமிழக முதல்வர், மத்தியஅரசின் புதிய மசோதாபடி,   “அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் இருந்து அதிக பிரதிநிதிகள் இருப்பார்கள். இதனால் மக்களவையில் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது வெறும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்த கவலை மட்டும் அல்ல. இது மாநிலத்தின் உரிமை சார்ந்த கவலை” என்று கூறியுள்ளார். மேலும், இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இதில் பாஜக கலந்துகொள்ளாது என அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அழைத்துள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை தடை விதிக்கக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்எல்.ரவி சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அவரது மனுவில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள எங்கள் கட்சிக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுக்கவில்லை என்றும், எந்த தேர்தலிலும் களம் காணாத பல கட்சிகளுக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது பாரபட்சமானது, அதனால் அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதிகள் எண்ணிக்கை மறுசீரமைப்பு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் 8 தொகுதிகள் குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மார்ச் 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு