சென்னை: வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளது ‘ஈசன் புரொடக்சன்ஸ்’ நிறுவனம். இவர்கள் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்தனர். இந்த படத்தை தயாரிக்க  தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால்,  அவர்கள் தயாரித்த படம் பெரும் தோல்வி அடைந்த நிலையில்,  வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை உருவானது. இதனால்,  கடன்தொகையை திருப்பி தராததை எதிர்த்து,  தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கை ஏற்கனவே  விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரனை  மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, இந்த விவகாரத்தை மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9கோடியே 2லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி 2024-ஆம் ஆண்டு மே 4 அன்று உத்தரவிட்டார்.

அதன்படி, படத்திற்கான,  உரிமைகளைப் பெற்று அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்யவும், மீதத்தொகையை ‘ஈசன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்திடம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையடையவில்லை எனக் கூறி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. அது தொடர்பான,   மனுவில், தற்போது வரை கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், பதில்மனு தாக்கல் செய்ய ‘ஈசன் புரொடக்‌ஷன்ஸ்’ தரப்பில் அவகாசம் கேட்ட போதும், இதுவரை பதில்மனு தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

மேலும், இந்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 5-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.