சென்னை: மார்ச் 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில், தொகுதிகளை குறைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது என்றும், இதை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று தலைமைச்செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அலோசனை கூட்டத்தில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்தியஅரசு தொகுதி மறுசீரமைப்பு செய்து வருகிறது. தமிழ்நாட்டில், மக்கள்தொகை குறைவாக உள்ள காரணத்தினால் பாராளுமன்ற தொகுதியை குறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 39 தொகுதியில் இருந்து 8-ஐ குறைத்து 31 ஆக மாற்ற மத்தியஅரசு முடிவு செய்து. இதனால், நமக்கு உரிய 39 பாராளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, இது மாநிலங்களின் உரிமை தொடர்பான பிரச்சனை, அதனால், இதுதொடர்பாக ஆலோசிக்க வேண்டியது உள்ளது. இதன் காரணமாக, நாம், மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. தமிழ்நாட்டுக்கு 8 பாராளுமன்ற இடங்கள் குறைவதால், நமது பிரதிநிதித்துவம் குறையும் என கூறியவர், தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டம் மார்ச் 5-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் கடந்து அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற அனைத்து கட்சிகளுக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?
ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்து வத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!
கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன். நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!