சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான புதிய  நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் வெளியிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திறமையான ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், 1997-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நல்லாசிரியர் விருதை ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது‘ என்னும் பெயரில் வழங்கி வருகிறது. ஆசிரியா்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் தமிழக அரசு ஆண்டுதோறும் செப்டம்பா் 5 ஆம் நாள் மாநிலத் தலைநகரான சென்னையில் முதலமைச்சரால் அல்லது அமைச்சா் பெருமக்களால் இவ்விருது தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த நிலையில், நடப்பாண்டு  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதில், 38 மாவட்டங்களில் இருந்து 386 ஆசிரியர்களை விருதுக்கு தேர்வு செய்ய புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு  டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக்கூடாது என்றும்,  அரசியல் தொடர்பில் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது என்றும்,  தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் சிஇஓ (CEO)  தலைமையில் ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கு பரிந்துரைக்க  ஐந்தாண்டுகள் எந்த புகாருக்கும் இடம் தராமல் ஆசிரியர் பணியாற்றி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.