தடுப்பூசிக்காக மக்களை அல்லாட விட்டதற்கா மோடிக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டணும்! சு.வெங்கடேசன் எம்.பி.

Must read

மதுரை: தடுப்பூசிக்காக மக்களை அல்லாட விட்டதற்கு மோடிக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஓட்டணுமா?  என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் கடுமையான தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்த நிலையில், மத்தியஅரசு தரப்பில் இருந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.  அதில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாய் கொடுத்தற்காக மோடிக்கு நன்றி சொல்லி போஸ்டர் ஒட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தவிட்டுள்ளது.  இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  மதுரை எம்.பி. சு.வெங்கடேன், தடுப்பூசிகளுக்கு மூன்று விலைகள் வைத்து மாநிலங்களை அல்லாட விட்டதற்காகவா? பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில்,

“நன்றி பிரதமர் அவர்களே!”

இப்படி ஒரு போஸ்டர் ஒட்ட வேண்டுமென்று  அஞ்சல் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தல் வந்திருக்கிறது.

எதற்காம்? எல்லோருக்கும் இலவசமாய் தடுப்பூசி  தந்ததற்காகவாம்….  மூன்று விலைகள் வைத்து மாநிலங்களை அல்லாட விட்டதற்கா?… ஒன்றிய அரசு ஒன்று இருக்கும் போது ஒவ்வொரு நாடாய் மாநில அரசுகளை தடுப்பூசி கிடைக்குமா என்று அலைய விட்டதற்கா?.

கடும் எதிர்ப்பு வந்த பிறகு தடுப்பூசி கொள்கையை திரும்பப் பெற்று அப்போதும் கூட 25% ஐ தனியாருக்கு ஒதுக்கிய கார்ப்பரேட் பாசத்திற்கா?…

இந்தியாவில் உற்பத்தியான தடுப்பூசிகளை வெளி நாட்டிற்கு அனுப்பி விட்டு இங்கே இந்திய மக்களை தடுப்பூசி கிடைக்காமல் அலை மோத விட்டதற்கா?…  தடுப்பூசி பற்றாக்குறை வந்தவுடன் எவ்வளவு தடுப்பூசி இருக்கிறது என்பதை கூட மக்களுக்கு சொல்லக் கூடாது என மாநில அரசுகளுக்கு வாய்ப் பூட்டு போட்டதற்கா?.

உலகில் தடுப்பூசி போட்டவர்கள் விகிதத்தில் 10 வது இடத்துக்கும் கீழே இந்தியா இருப்பதற்கா?…

இப்படி எத்தனையோ காரணங்களுக்காக மக்கள் மத்திய அரசை கடுமையாக வசையாடிக் கொண்டிருக்கும் போது அரசாங்க செலவில், அரசு அலுவலகத்தின் முன்னாள் அரசு அதிகாரியே போஸ்டர் ஒட்ட வேண்டுமாம். அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ஒரு வாக்கியம் விடுபட்டுப் போயுள்ளது.

“மூன்றாவது அலை வருவதற்குள் இந்த போஸ்டரை ஒட்ட வேண்டும்” என்ற வாக்கியத்தை அடுத்த சுற்றறிக்கையில் சேர்த்துக்கொள்ளவும்.”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

 

More articles

Latest article