சென்னை: கொரொனா நிவாரண நிதியிலிருந்து கொரொனா சிகிச்சைக்கு மட்டும் செலவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை  69 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள், வணிக நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவி கோரி முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாராளமாக தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு  நிதி வழங்க வேண்டும் என முதல்வர்  கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.69 கோடி பெறப்பட்டுள்ளது.  முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மே 17-ந்தேதி வரை இணையதளம் வழியாக ரூ.29.44 கோடி, நேரடியாக ரூ.39.56 கோடி என மொத்தம் ரூ.69 கோடி நன்கொடையாக வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

இந்த கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடை பணத்தை  கொரோனா சிகிச்சைக்கு மட்டுமே  ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தற்போது முதற்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும்,  அதில் ரெம்டெசிவிர், உயிர்காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜனை ரெயிலில் கொண்டு வரும் கண்டெய்னர்களை வாங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.