சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்  தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில்தொற்று பரவல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் உயர்ந்து வருகிறது.  நேற்று (22ந்தேதி) புதிதாக  1385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக  சென்னையில் மட்டும் 496 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை  8,68,367 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில்,  கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால், வழிப்பாட்டுத்தலங்களில் கொரோனா நடவடிக்கைகளை மீண்டும் அமல்படுத்த உத்தரவிப்பட்டு உள்ளது. மேலும்,   பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களும் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, தமிழக  தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்  தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த  ஆலோசனை கூட்டத்தில், மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்துதல், நோய் தடுப்பு பணி, தடுப்பூசி போடும் பணியை மேலும் வேகப்படுத்துவது, தடுப்பூசிகள் போடுவதை அதிகப்படுத்துவது உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.