சென்னை: 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து 4 நாட்களாக தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று மாலை கவர்னர் பன்வாரிலாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க உள்ளார்.

தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, தமிழக கவர்னர் பன்வாரிலால் தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, உள்துறை செயலாளர்களை சந்தித்து கடந்த 3ந்தேதி ஆலோசனை நடத்திய நிலையில் தனி விமானம் மூலம் டில்லி சென்றார்.

நேற்று டில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்த நிலையில், இன்று தமிழகம் திரும்பினார்.

இந்நிலையில், இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவர்னரை சந்தித்து பேச இருக்கிறார்.

இந்த சந்திப்பின்போது, காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் விவகாரம் போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது