சென்னை:

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையில் தமிழகத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் மைதானத்திற்கு வந்து போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 4வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் நியூட்ரினோ எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போன்ற மக்கள் விரோத திட்டத்திற்கான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்,ஐபிஎல் போட்டியை காண டிக்கெட் வாங்க ஒரு தரப்பினர் கூடியது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வந்தது.

சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பல கட்சி தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

மக்கள் வாழ்வாதாரத்திற்காக போராடி வரும் நிலையில், தற்போது விளையாட்டு தேவையா என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், போராட்டங்களை திசைத்திருப்ப ஆட்சியாளர்கள் ஐபிஎல் போட்டிகளை பயன்படுத்தலாம் என்றும். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இறையாகிவிடக்கூடாது என்று எச்சரித்தார்.

மேலும், மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையில் தமிழகத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்தக்கூடாது, கிரிக்கெட் விளையாட்டிற்கோ, ரசிகர்களுக்கோ, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கோ நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று தெரிவித்துள்ள அவர், எங்கள் எச்சரிக்கையையும் மீறி சென்னையில் போட்டி நடத்தினால், தங்களது அமைப்பை சேர்ந்தவர்கள் டிக்கெட்டு எடுத்துச்சென்று மைதானத்திற்குள் போராட்டம் நடத்துவார்கள் என்றும், இதை தமிழக அரசு, தமிழக காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஏற்கனவே விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, ஜேம்ஸ் வசந்தன் உள்பட பலர் ஐபிஎல் போட்டியை தவிர்க்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் ஐபிஎல் போட்டிக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில்,  ஏப்ரல் 10-ல் ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெற்றால் கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் என்று  மனிதநேய ஜனநாயக கட்சி  தமிமுன் அன்சாரி தெரிவித்து உள்ளார்.

காவிரி வாரியம் அமைக்கப்படும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மனு கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.