சென்னை , வில்லிவாக்கம் ,அகஸ்தீஸ்வரர் கோயில்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ளது அகஸ்தீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக அகஸ்தீஸ்வரர் காட்சி தருகிறார். உற்சவர் சோமஸ்கந்தர், தாயார் ஸ்வர்ணாம்பிகை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இந்தக் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி 10 நாட்கள் பிரம்மோற்சவம், கார்த்திகையில் 1008 சங்காபிஷேகம், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் ஆகிய நாட்களில் திருவிழா நடைபெறுகிறது.

தல சிறப்பு:

அம்பிகையின் நேரடி பார்வையில் குரு பகவான் காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் அம்பிகையை வேண்டினால், குருவின் பார்வை கிடைக்கும். குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அதற்கேற்ப இந்தக் கோயில் காணப்படுகிறது. குரு பகவானால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும். இந்தக் கோயில் தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். ஆகையால், இந்தக் கோயிலை செவ்வாய்கோயில் என்று அழைக்கிறார்கள்.

பொதுவான தகவல்:

கோயில் பிரகாரத்தில் நடராஜர், பைரவர், சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வில்வாம்பிகை, ஆதிசங்கரர், நால்வர் சன்னதிகள் உள்ளன.

வேண்டுதல்:

செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை உள்ளவர்கள், பயந்த குணம் கொண்டவர்கள் ஆகியோர் இந்தக் கோயிலில் வழிபாடு செய்தால் பலன் உண்டாகும் என்பது ஐதீகம்.

தல பெருமை:

அகத்திய முனிவருக்கு சிவபெருமான், அம்பிகையுடன் காட்சி கொடுத்த போது அம்பாள் திருமணக் கோலத்தில் தங்க நகைகள் அணிருந்திருந்தாள். ஆகையால் ஸ்வர்ணாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். இவளது சன்னதிக்கு முன்பாக மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி சன்னதியும், எதிரில் நவக்கிரக சன்னதியும் உள்ளது.

வில்லிவாக்கம்: 

வில்வலன் மற்றும் வாதாபியை அகத்திய முனிவர் அழித்த தலம் என்பதால், இந்தப் பகுதி வில்லிவாக்கம் என்றழைக்கப்படுகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் போது அகத்தியர் அசுரர்களை வதம் செய்த வைபவம் நடக்கிறது.

ஐஸ்வர்ய வீரபத்திரர்:

அகஸ்தீஸ்வரர் கோயிலின் தெற்கு பகுதி வாசலுக்கு எதிரில் உள்ள தனிக்கோயிலில் வீரபத்திரர் காட்சி தருகிறார். கோரைப்பல்லுடன் தனது இட து கையில் தண்டம் ஏந்திய நிலையில் இருக்கும் இவருக்கு அருகில் தட்சன் வணங்கிய கோலத்தில் இருக்கிறான். முன் மண்டபத்தில் பத்ரகாளியம்மன் சன்னதி உள்ளது. ஒவ்வொரு பௌர்ணமி நாலிலும் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இத்தலத்து வீரபத்திரர் குபேர திசையான வடக்கு நோக்கியிருப்பதால் இவரிடம் வேண்டிக் கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். ஆகவே இவரை ஐஸ்வர்ய வீரபத்திரர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

செவ்வாய் ஸ்தலம்:

நவக்கிரகங்களில் அங்காரகன் எனப்படும் செவ்வாய் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட கோயில் இது. ஆகவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது.

தீர்த்தக் கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். இந்தக் கோயில் செவ்வாய்க் கிழமை கோயில் என்றே அழைக்கிறார்கள்.

தல வரலாறு:

சிவபெருமான் பார்வதி தேவி திருமணத்தின் போது தென் திசை கீழ் நோக்கி காணப்படவே, அதனை சரிசெய்ய அகத்தியர் தென் திசைக்கு வந்தார். அவருக்கு வில்வலன், வாதாபி என்ற சகோதர அசுரர்கள் தொல்லை கொடுத்தனர். அவர்களை அகத்திய முனிவர் வதம் செய்தார். இதனால், அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தொடர்ந்து, தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட்டார். தொடர்ந்து தனது பூஜைகள் சரிவர நடக்க சிவபெருமானிடம் பாதுகாப்பு கேட்டார். அவரது பூஜைக்கு பாதுகாப்பாக இருக்க வீரபத்திரரை அனுப்பிய சிவபெருமான் அவரது தோஷத்தையும் நீக்கினார்.

அகத்திய முனிவரின் பூஜைக்கு காவலுக்கு வந்த வீரபத்திரர் இந்த தலத்தில் காட்சி கொடுத்தார். அகத்திய முனிவர் வழிபட்ட சிவன் என்பதால் இத்தல இறைவன் அகஸ்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.