சென்னை

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

பாலிவுட் இயக்குநர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் மலையாள திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். இப்படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது.  அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன.  கேரளாவில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தன.

இப்படத்துக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயனும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.  , இந்த படம் கலவரத்தைத் தூண்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடனும் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.  இன்று இந்த வழக்கு விசாரணைக்கு  வந்தது.

மனுதாரர் தரப்பில் வாதிடும்போது, டீசரில் உண்மை கதை என்றும், தற்போது பேட்டிகளில் கற்பனை கதை என்றும், படத் தயாரிப்பு குழுவினர் தெரிவிக்கிறார்கள் என்றும் இந்த படத்திற்கு எதிராக அளித்த புகாரின் மீது தணிக்கை குழு எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் தணிக்கை சான்று வழங்கமுடியாது என வாதிடப்பட்டது.

படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், இது உண்மை கலந்த கற்பனை படம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ஏற்கெனவே தணிக்கை சான்று வழங்கப்பட்ட நிலையில், தடை கோரி தாக்கல் செய்யப்பட வழக்கிற்கு உகந்தது அல்ல என்று வாதிடப்பட்டது.  வழக்கில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கெனவே இந்த படம் தொடர்பாகக் கேரள  உயர்நீதிமன்றம், மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இப்படத்திற்குத் தமிழக ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம், மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.