சண்டிகார்:  இரண்டு துணைமுதல்வர்களுடன் பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார் சரண்ஜித் சிங் சன்னி. அவருக்கு மாநில புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைச்சத்து. மாநில முதல்வராக கேப்டன் அமரிந்தர் சிங் பதவி ஏற்றார். அவரது  தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. அமைச்சரவையில் பிரபல கிரிக்கெட் வீரர் சித்துவும் இடம்பெற்றிருந்தார். ஆனால், முதல்வருக்கும், அவருக்குமான கருத்து வேறுபாட்டினால், கடந்த 2019-ம் ஆண்டு, சித்து மந்திரிசபையில் இருந்து விலகினார். அதில் இருந்து அவருக்கும், அமரிந்தர் சிங்குக்கும் இடையேயான மோல் தீவிரமடைந்தது. இதனால், மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சித்துவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

பஞ்சாபில் மீண்டும் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டது.  இதையடுத்து, மாநில முதல்வரை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனால், முதல்வரான கேப்டன் அம்ரிந்தர் சிங் கோபமடைந்தார். இதற்கிடையில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக சித்துவை கட்சி தலைமை அறிவித்தது. மேலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அம்ரீந்தர் சிங்குக்கு  கட்சி மேலிடம் தொடர்ந்து வலியுறுத்தவே அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக, மாநில கவர்னர், பன்வாரிலாலை சந்தித்து கடிதம் கொடுத்தார்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த  அமரீந்தர் சிங், “கட்சியால் மூன்று முறை தான்  அவமானப்படுத்தப்பட்டதாகவும், இது எனக்கு மிகப்பெரிய அவமானம் என்றும் விமர்சித்திருந்தார்.

இதையடுத்து, புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் முயற்சிகள் நடைபெற்றன. முதல்வர் பதவிக்கு சித்து.  சுனில் ஜாக்கர், திரிப்த் ராஜிந்தர்சிங் பஜ்வா, சுக்ஜிந்தர் சிங் ரந்தவா என பலரது பெயர்கள் முன்மொழியப்பட்ட நிலையில், 2 நாள் இழுறிக்கு பின்னர், மாநில முதல்வராக அமரிந்தர் சிங் மந்திரிசபையில் தொழில்கல்வித்துறை மந்திரியாக பதவி வகித்த  சரண்ஜித் சிங் சன்னி (வயது 58) தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர்.

இதையடுத்து, இன்று காலை பதவி ஏற்பு விழா நடைபெற்றது.  பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னிக்கு  கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, 2 துணைமுதல்வர்களும் பதவி ஏற்றனர்.  சுக்ஜிந்தர் சிங் ரந்தவா  மற்றும் ஓம் பிரகாஷ் சோனி ஆகியோர் துணைமுதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த பதவி ஏற்பு விழாவில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்  சித்து, கலந்து கொண்டார். ஆனால், முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார்.