டில்லி:

ந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று பேரணியாக சென்று ஜனாதிபதி ராம்நாம் கோவிந்தை சந்தித்து மனு கொடுத்தார்.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, புதியதாக உருவாக்கப் படும் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், மோடி அரசு இதை நிறைவேற்றுவதாக உறுதி அளித்து கடந்த பாராளுமன்ற தேர்தலை கூட்டணியுடன்  சந்தித்த நிலையில், பின்னர் வாக்குறுதியை நிறைவேற்றாததல், கூட்டணியில் இருந்து விலகிய சந்திரபாபு நாயுடு பாஜக அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்.

வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டில்லியில் உள்ள ஆந்திர பவனில் நேற்று சந்திரபாபு நாயுடு நேற்று உண்ணா விரதம் மேற்கொண்டார்.  அவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில்,  இன்று பிற்பகல் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியாக சென்றார். அவருடன் தெலுங்கு தேச எம்.பி.க்கள் உள்பட ஏராளமானோர் பேரணியாக சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர்.