டில்லி

பீகார் காப்பகத்தில் காணாமல் போன 11 பெண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள அரசு உதவி பெறும் காப்பகத்தில் இருந்த பெண்கள் பலர் பலாத்காரத்துக்குட்படுத்தப் பட்டதாக புகார்கள் எழுந்தன. இவ்வாறு 34 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது மருத்துவ சோதனையில் கண்டறியபட்டது. அத்துடன் ஒரு சிறுமியை கொலை செய்ததாகவும் தகவல்கள் வந்தன.

இந்த வழக்கு விசாரணையில் அஸ்வனி குமார் என்னும் மருத்துவர் இந்த பெண்களுக்கு மயக்க ஊசி செலுத்தி அதன் பிறகு பலாத்காரங்கள் நடந்தது தெரிய வந்தது. இதில் பீகார் முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவரும் இந்த காப்பகத்தை நடத்தி வந்தவருமான பிரஜேஷ் தாகுருக்கு பெரும் பங்கு உள்ளதால் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது

சிபிஐ விசாரணையை சந்தேகித்து வாக்கறிஞர் ஃபவுசியா ஷாகில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார்.   அதை ஒட்டி சிபிஐ உச்சநீதிமன்றத்துக்கு அளித்த அறிக்கையில், “இந்த விசாரணையில் காப்பகத்தில் இருந்து 11 சிறுமிகள் மர்மமாக காணாமல் போய் உள்ளனர். இவர்களை கண்டறிய முடியவில்லை. இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. அதனால் அவர்கள் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

ஏற்கனவே ஒரு பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தில் பல எலும்புகள் கிடைத்துள்ளன.

இந்த கொலைகள் குறித்து பிரஜேஷ் தாகுர் மற்றும் அவருடைய கூட்டாளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் அடையாளங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் யார் என கண்டறிந்த பிறகு அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ள்து.

இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்துக்கு மனு அளித்த வழக்கறிஞர் ஃபவுசியா ஷாகில், “சிபிஐ விசாரணையில் இந்த குற்றத்தில் பலர் சம்பந்தப்பட்டுள்ளது ஏற்கனவே தெரிய வந்துள்ளது. ஆனால் அவர்களை கண்டறிவதில் சிபிஐ அதிக அக்கறை காட்டவில்லை. ஒரு சிலரை பற்றிய உண்மைகளை சிபிஐ இந்த அறிக்கையில் மறைத்துள்ளதாக சந்தேகம் எழுகின்றது.

குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் மீசை வைத்த மாமா என ஒருவரையும், தொப்பை உள்ள அரசியல் தலைவர் என மற்றொருவரையும் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் இருவரும் யார் என சிபிஐ இதுவரை கண்டறியாமல் உள்ளது. அவர்கள் இருவரும் அடிக்கடி அந்த காப்பகத்துக்கு வருபவர்கள் என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியும் இதில் சிபிஐ சிறிதும் அக்கறை காட்டவில்லை” என தெரிவித்துள்ளார்.