பெங்களூர்:
ர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் 12, 000 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர் பாசனத்தை நம்பி தமிழகத்தில் ஏராளமான விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தண்ணீர் தர மறுப்பு தெரிவித்து வருகிறது. முறைப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை விட குறைந்த அளவு நீரே திறந்துவிடப்படுவதால், பற்றாக்குறை நிலவுகிறது. இதனையடுத்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாகவும் கோரிக்கை விடுத்திருந்தார். பின்னர் அண்மையில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு தினமும் 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் உத்தரவிட்டார்.

இதனையடித்து மைசூருவில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடகாவில் போதிய அளவு தண்ணீர் இல்லை எனவும், தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக காவிரி நீர்ப்பாசன கழக நிபுணர்கள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே காவிரியில் வினாடிக்கு 18,000 கன அடி நீர் திறக்க உத்தரவிடக்கோரி , இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 6,998 கனஅடி தண்ணீரும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5,268 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்ட நிலையில் , இன்று தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 11,998 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்படிருக்கிறது. இந்த நீர் காவிரியில் தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.