காவிரி: மத்திய அரசின் தடுமாற்றத்திற்கு காரணம் என்ன?: பழ.நெடுமாறன் தகவல்

Must read

சென்னை:
ர்நாடக சட்டமன்ற்றத் தேர்தலை மனதில் வைத்து செயல்படுவதால்தான், மத்திய அரசு காவிரி விவகார்த்தில் தடுமாறுகிறது என்றும் இது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
“நாடாளுமன்றத்தில் சட்டமியற்றிதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் வாதாடப்பட்டிருப்பது சட்டப்படி தவறானதாகும். வேண்டுமென்றே காலங்கடத்தும் நோக்குடனும், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் மத்திய அரசு இந்த நிலைப்பாட்டினை எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
download
1956ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட நதிநீர் வாரியச் சட்டத்தின் பிரிவு 4(1)ன்படி பன்மாநில நதிநீர் பாயும் ஏதாவது ஒரு மாநிலம் கேட்டுக் கொண்டால் நதிநீர் வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதின்பேரில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் 2007ஆம் ஆண்டில் அளித்தத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறியது. அதன்படி அமைப்பதற்கு மத்திய அரசு முன்வராத காரணத்தினால்தான் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட நேர்ந்தது. இந்த வழக்கில்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பளித்தது. மீண்டும் அக்டோபர் 2ஆம் நாள்  உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துத் தீரவேண்டும் என ஆணைப்பிறப்பித்தது.
அந்த ஆணையின்படி மத்திய நீர்ப்பாசனத் துறைச் செயலாளர் தமிழகம் உள்பட நான்கு மாநில அரசுகளுக்கும் காவிரி மேலாண்மை வாரியத்தில் நியமிப்பதற்குரிய அந்தந்த மாநில பிரதிநிதிகளின் பெயரைப் பரிந்துரை செய்யும்படி கடிதம் அனுப்பினார். அதற்கிணங்க தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்கள் பிரதிநிதிகளின் பெயர்களைக் குறித்து மத்திய அரசிற்கு அனுப்பின. மேலாண்மை வாரியத்தின் தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களின் பெயர்களை விரைவில் மத்திய அரசு அறிவிக்கும் என்றும் கூறப்பட்டது.
மேலாண்மை வாரியம் அமைக்கும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென மத்திய அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டது ஏன்? கர்நாடகத் தேர்தலில் ஆதாயம் தேடும் நோக்கம் தவிர வேறு இல்லை என்பது தெளிவு. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கர்நாடகத்தின் சூழ்ச்சியை புரிந்துகொண்ட உச்சநீதிமன்றம் அக்டோபர் 15ஆம் தேதி வரை தண்ணீரைத் திறந்துவிடும்படி ஆணையிட்டுள்ளதை வரவேற்கிறேன். அதைப்போல காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் நிலைநிறுத்தும் என நம்புகிறேன்” – இவ்வாறு தனது அறிக்கையில் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
 

More articles

Latest article