கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றது தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்ட மம்தா கட்சி முன்னாள் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது.  இதுதொடர்பாக விசாரித்து வரும் லோக்பால் ஆணையம் வெளியிட்ட  உத்தரவால் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது.

 நாடாளுமன்றத்தில், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், குறிப்பாக பிரதமர் மோடி, அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மம்தா கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பியான மஹுவா மொய்த்ரா, தனியார் நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு,  நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும்  அதானிக்கு எதிராக கேள்வியெழுப்பிய விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா.

இவர் மக்களவை எம்.பி.யாக இருந்த காலக்கட்டத்தின்போது,  61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர் பானவை. இந்த கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா ரூ.2 கோடி வரை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில் வசிக்கும் ஹிராநந்தானி பயன்படுத்தியதும்  விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பான தகவலை,  மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த்  என்பவர் அம்பலப்படுத்தினார். இதையடுத்து, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக  நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி, மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணையின்போது , விசாரணைக்கு ஓத்துழைக்காமல், மஹுவா பாதியிலேயே வெளியேறி னார்.  இது நாடாளுமன்ற குழுவினரை அவமதிப்பது போல இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், மொய்ராவோ,  நெறிமுறைக் குழு தலைவர் அநாகரிகமான கேள்விகளை எழுப்புவதாக குற்றம் சாட்டினார். ஆனால், உண்மையான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மஹுவா இந்த நாடகத்தை ஆடியதாகவும், இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு துணை போனதாகவும் நெறிமுறைக் குழு தலைவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, இந்த  லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை கடந்த ஆண்டு நவ.9-ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ,  நாடாளுமன்ற நெறிமுறை குழு அறிக்கை  கடந்த ஆண்டு டிச 8ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அவையில் கடுமையான அமளி நிலவியது.  அமளிக்கு மத்தியில் மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அவர் பதவி இழந்தார்.

இநத் நிலையில்,  மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்ற வழக்கில் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க சிபிஐக்கு லோக்பால் ஆணையம் மார்ச்  15-ம் தேதி உத்தரவிட்டது.  விசாரணையின்போது லோக்பால் பிரிவு 20(3)(ஏ)-ன் கீழ் குற்றச்சாட்டுகளை விசாரித்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு ஆணையம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த உத்தரவின் தொடர்ச்சியாக கொல்கத்தாவில் உள்ள மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

“மஹுவா மொய்த்ரா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால், குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான சான்றுகள் உள்ளன. எனவே அவர் வகித்த பதவியின் அடிப்படையில் பார்த்தால், குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகவே, உண்மையைக் கண்டறிய ஆழமான விசாரணை தேவை. ஒவ்வொரு மாதமும் விசாரணையின் நிலை குறித்து அவ்வப்போது சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று லோக்பால் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபரிடம் விலைபோன மம்தா கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா!

#நாடாளுமன்றத்தில்_கேள்விஎழுப்ப_மஹுவா_மொய்த்ரா_எம்பி_லஞ்சம்! கே. எஸ். இராதா கிருஷ்ணன்