சென்னை: சிவங்ககை தொகுதியில் மீண்டும் களமிறங்கும் முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், அமலாக்கத்துறையை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும்,  அடங்காப்பிடாரியாக  அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது என காட்டமாக கண்டனம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும்  தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கிடையில், அமலாக்கத்துறை, என்ஐஏ போன்ற மத்தியஅரசின் அமைப்புகள், எதிர்க்கட்சியினரை குறிவைத்து தூக்கி வருகின்றன. டெல்லி மதுபான கொள்ளை வழக்கில், 9முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கார்த்தி சிதம்பரம் உள்பட குற்றச்சாட்டுக்கள் உள்ள பலரது வழக்குகளின் மீதான விசாரணையை அமலாக்கத்துறை மீண்டும் துரிதப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சிகளின் கணக்குகளை எல்லாம் முடக்கி, வங்கிக் கணக்கைச் செயல்படுத்த முடியாத அளவிற்குச் செய்துள்ளனர்.

தற்போது பாஜகவின் நோக்கம் என்னவென்றால், தேர்தலின் போது எதிர்க்கட்சி தலைவர்கள் செயலிழந்து இருக்க வேண்டும் என்பதுதான். அமலாக்கத்துறை சோதனை கைது தேவையே கிடையாது. ஏனென்றால் பணப்பரிமாற்றம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். அதனை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். அதற்கு ஆவண ஆதாரம் வேண்டும்.

“டெல்லி முதலமைச்சரை பாஜக அரசு தனது கைப்பாவையான அமலாக்கத்துறை மூலம் கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். குறிப்பாக இந்தியாவின் தலைநகரம், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தேர்தலுக்கு முன்பாக கைது செய்திருப்பது முழுக்க முழுக்க பழி வாங்கும் செயலாகவும், எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலாகத் தான் பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர் ஒருவரைக் கைது செய்து, தற்போது வரை ஜாமீனில் விடாமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அமலாக்கத்துறை வழக்குகளுக்கு எல்லாம் கைது தேவையே கிடையாது. நீதித்துறைதான் இந்த அடங்காப்பிடாரியான அமலாக்கத்துறையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் ஆண்டுக்கணக்கில் சிறையில் உள்ளனர். அதற்கான டிரையல் இன்னும் துவங்கக்கூடவில்லை. இதெல்லாம் எதிர்க்கட்சி களை முடக்குவதற்காகத் தான் நடக்கிறது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்களுடன் எந்த சோதனையும் நடப்பதில்லை. அதேபோல பல வழக்கு இருந்தால் அனைத்தையும் மூடி மறைத்து விடுகின்றனர். மக்கள் இந்த சர்வாதிகார போக்கைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்குச் சரியான முடிவு கட்டுவார்கள்.

பொன்முடி, 2ஜி ஊழல் வழக்கு  உள்பட தமிழ்நாடு சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்தவர்,  உச்ச நீதிமன்றம் தலையில் கொட்டுவதற்கு முன்னர் ஆளுநர் அமைச்சர் பொன்முடிக்குப் பதவிப்பிரமாணம் செய்திருக்க வேண்டும். ஜனாதிபதி ஆளுநர் ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

ஆ.ராசா மற்றும் கனிமொழி 2ஜி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. தேர்தலையொட்டி மீண்டும் தூசிதட்டி விசாரணைக்கு எடுத்துள்ளனர். ஆனால் எப்படி கீழமை நீதிமன்றத்தில் வெற்றி பெற்றார்களோ, அதேபோல உயர்நீதிமன்றத்திலும் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

மத்தியில், இண்டி கூட்டணி ஆட்சி அமைத்தால் அதில் திமுகவின் பங்கு அதிகமாக இருக்கும். இந்தியா கூட்டணி பார்ட்டி லவ் (40 – 0) என்ற செட் கணத்தில் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் தான் எம்பியாக டெல்லிக்குச் செல்வார்கள்.  தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை இருவரும் இதுவரை ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றது கிடையாது. அவர்களை ஊடகங்கள் தான் பூதக்கண்ணாடி வைத்து பிரச்சாரம் செய்கிறது அவர்கள் வீட்டுக்குச் செல்வார்கள்” எனத் தெரிவித்தார்.