சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடி  தொகுதியில் வெற்றிபெற்று தமிழக அமைச்சராக உள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து, தோல்வி அடைந்த  அதிமுக வேட்பாளர் ராமு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

அதுபோல, இதேபோல் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற எஸ்.பழனி நாடார் வெற்றியை எதிர்த்தும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 6ந்தேதி வாக்குபதிவு நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வேலுர் மாவட்டம் காட்பாடி தொகுதியில்   திமுக சார்பில் வேட்பாளராக  அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.ராமு 745 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இநத் தொகுதியில் ஆரம்பம் முதலே  இழுபறி நீடித்து வந்த நிலையில், துரைமுருகன் வெற்றிபெறுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்துவந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. துரைமுருகன்  52,526 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளரான ராமு 51,087 வாக்குகள் பெற்றிருந்தார். இருவருக்கும் இடையே 745 வாக்குகள் மட்டுமே வித்தியாசம்.

துரைமுருகன் தற்போது,  திமுக அமைச்சரவையில் நீர்ப்பாசனம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

இநத்நிலையில், அவரது வெற்றியை எதிர்த்த   சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  அதிமுக வேட்பாளர் ராமு என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்‍. தேர்தலில் தகுதியான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும், தேர்தல் நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை எனவும், தபால் வாக்குகளையும், மின்னணு வாக்குகளையும், மறு எண்ணிக்கை நடத்தவேண்டும் என மனுவில் ராமு கோரிக்கை விடுத்துள்ளார்‍.

இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.