சென்னை

ன்று தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு  முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  இரண்டு தவணைகளாகத் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.. ஜனவரி மூன்றாம் தேதி முதல் 15-18 வயதுடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தப்பட்டு வருகிறது.

ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 10-ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தகுதி உள்ள 4 லட்சம் பேரில் நேற்று முன் தினம் வரை, 95 ஆயிரம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இனி வரும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தச் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இதையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.  சென்னையில் மட்டும் 160 இடங்களில் 20 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம் தொடங்கி உள்ளது.

இந்த முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது.  இதற்கு  இரண்டாவது டோஸ் செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் ஆதார் அடையாள அட்டையை உடன் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.