கொல்கத்தா

தேர்தலில் வெற்றி பெற்றாலும் தார்மீக ரீதியாக பாஜக தோல்வி அடைந்துள்ளது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்று  ஆட்சி அமைக்க உள்ளது.  இது குறித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சமீபத்தில் ஒரு கட்டுரையப் பதிந்துள்ளார்.

அதில் மம்தா பானர்ஜி, “குஜராத் மக்களுக்கு என் பாராட்டுகளைக் கூறிக் கொள்கிறேன்.   அவர்களால் தான் பாஜகவுக்கு தர்ம சங்கடத்துடன் கூடிய ஒரு வெற்றி கிடைத்துள்ளது.   என்னதான் வெற்றி என பாஜக சொல்லிக் கொண்டாலும் உண்மையில்  தார்மீக ரீதியாக பாஜக தோல்வி அடைந்துள்ளது.   பல குஜராத் வாக்காளர்கள் வன்முறைக்கும் அநீதிகளுக்கும் தாங்கள் எதிராக உள்ளதை நிரூபித்துள்ளனர்.   வரப்போகும் 2019ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் வெற்றி  பெறப் போவதாக கனவு காணும் பூனைக்கு மணி கட்டி உள்ளார்கள். “ என தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியின் தலைவர் ஜிதேந்தர் ரெட்டி, “தற்போது பாஜகவுக்கு வெற்றி கிடைத்திருக்கலாம்.  ஆனால் 2019ல் வரப் போகும் மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு எளிதாக இருக்காது.   கடும் சவாலாகவே அமையும்” எனக் கூறி உள்ளார்.