புவனேஷ்வர்:

டிசா மாநில முதல்வரின்  பிஜு ஜனதாதளம் கட்சியில் பாஜக சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துஷ்கர்காந்தி பெஹரா நவீன் பட்நாயக் முன்னிலையில் இணைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல், 4 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த தேர்தலின்போது பாஜக கூட்டணி கட்சியான பிஜு ஜனதாதளம் பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டது. தற்போது பிஜுஜனதாதளம், பாஜக தனித்தனியாக தேர்தலை சந்திக்கிறது.

ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை ஆகிய 2 தேர்தலிலும் காங்கிரஸுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி (ஜேஎம்எம்) கூட்டணி அமைத்துள்ளது. அங்கு ஆளும் பிஜு ஜனதா தளம், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாஜக சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துஷ்கர்காந்தி பெஹரா நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதாதள கட்சியில் இணைந்தார்.

ஏற்கனவே அனந்தபுர் வேட்பாளர் பாகிரதி சேதி பிஜூ ஜனதாதளத்தில் சேர்ந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வேட்பாளர் பாஜகவில் இருந்து விலகி, நவீன் பட்நாயக் கட்சியில் இணைந்திருப்பது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.