டில்லி

னது கட்சியின் உள்கட்சி பூசலின் போது அமைதி காத்து தம்மை பாஜக கைவிட்டு விட்டதாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் கூறி உள்ளார்.

மறைந்த அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானால் தொடங்கப்பட்ட லோக் ஜனசக்தி கட்சி வெகுநாட்களாக பாஜக கூட்டணியில் இருந்து வந்தது.   ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தனது மறைவு வரை பாஜக அமைச்சரவையில் பதவி வகித்து வந்தார்.   கடந்த ஆண்டு அவர் காலமான பிறகு அவர் மகன் சிராக் பாஸ்வான் கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.

சிராக் பாஸ்வான் கடந்த ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகித் தனித்துப் போட்டியிட்டார்.   ஆயினும் பாஜக – ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது,   இருப்பினும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி இருந்து வந்தது   விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றப்படும் போது சிராக் பாஸ்வான் அமைச்சரவையில் இடம் பெறுவார் எனக் கூறப்பட்டது.

ஆனால் சிராக் பாஸ்வானின் நெருங்கிய உறவினரான பசுபதி குமார் பராஸ் தலைமையில் 5 மக்களவை உறுப்பினர்கள் திரண்டு கட்சியைக் கைப்பற்ற முயன்று வருகின்றனர். லோக் ஜனசக்தி கட்சியின் செயற்குழுவைக் கூட்டி அதில் சிராக் பாஸ்வானைக் கட்சி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.  இந்நிலையில் டில்லியில் சிராக் பாஸ்வான் மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார்.

அந்த கூட்டத்தில் சிராக் பாஸ்வான், “எனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்,   ஆனால் எனது கட்சி உட்கட்சி பூசலின் போது பாஜக அமைதி காத்து என்னைக் கைவிட்டு விட்டது.  இது எனக்கு மிகவும் காயத்தை உண்டாக்கி இருக்கிறது.  கஷ்டப்பட்ட காலத்தில் பாஜக எனக்கு கை கொடுக்கவில்லை.

எனக்கு எதிராகப் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார்.  அவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராகக் கூடாது எனச் செயல் படுகிறார்.  எனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வானுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.  அவர் தூண்டுதலின் பேரில் பசுபதி குமார் கட்சியை உடைக்க முயல்கிறார்.

எங்களுடன் பாஜக கூட்டணியைத் தொடருமா இல்லையா என்பதை பாஜக முடிவு செய்ய வேண்டும்.  இன்றைய கூட்டத்தின் மூலம் நான் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதை நான் நிரூபித்து விட்டேன்.  எனது தந்தை மறைவுக்குப் பிறகு ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் என்னை அழைத்த போதும் நான் பாஜகவுக்காகச் சம்மதிக்காமல் இருந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.