பைக் சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் மரணம்….உலக சாதனை முயற்சியின் போது கோர விபத்து…

Must read

 

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மோசஸ் ஏரியில் நடக்க இருந்த பைக் சாகச நிகழ்ச்சி பயிற்சியின் போது சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் மரணமடைந்தார்.

ஏற்கனவே 2013 ம் ஆண்டு 297.6 அடி நீள தூரம் பைக்கில் தாண்டி உலக சாதனை படைத்திருக்கும் இவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

தற்போது, 351 அடி நீளத்தை பைக்கில் தாண்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்தார், இதற்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக வியாழனன்று மோசஸ் ஏரி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சறுவல் பாதையில் ஏறி வான்சாகசம் நிகழ்த்தினார்.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்ததால் பைக் அங்கு குவிக்கப்பட்டிருந்த மண் மேட்டில் விழுந்தது, விழுந்த வேகத்தில் அவரது தலையில் இருந்த ஹெல்மெட் தனியாக பறந்து சென்றதுடன் அவரது பைக்கின் ஹாண்ட் பாரில் அவர் பலமாக மோதிக்கொண்டார்.

பலத்தகாயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 28 வயது பைக் சாகச வீரரான அலெக்ஸ் ஹார்வில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த பயிற்சியின் போது அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்தில் இருந்தனர், இவருக்கு சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article