டெல்லி: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை மாநில தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்காது என பாஜகவின் வெற்றிக் கொண்டாட்டம் குறித்து தேர்தல் சாணக்கியரான  பிரசாந்த் கிஷோர் டிவிட் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த  5 மாநில  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் தவிர மற்ற  4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் பாஜக கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் வெற்றி  கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவருடன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய பிரதமர் மோடி, சட்டப்பேரவை தேர்தல்களில் சாதியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், சாதி இங்கு நாட்டை பிரிப்பதற்கு இல்லாமல் ஒற்றுமைப்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றவர், பாஜகவை வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி கூறுவதாகவும், “2019இல் நாம் மத்தியில் ஆட்சியமைத்த போது 2017ல் உத்தரப்பிரதேசத்தில் பெற்ற வெற்றிதான் அதற்குக் காரணம் என அரசியல் வல்லுநர்கள் கூறினர். தற்போது, 2022ல் நாம் பெருமளவில் வெற்றியைக் குவித்துள்ளோம். எனவே, 2024 மக்களவையிலும் நாம்தான் ஆட்சியமைப்போம்” எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் பேச்சு, பிரபல தேர்தல் வியூக அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர் பதில் தெரிவிக்கும் வகையில் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

இந்தியாவுக்கான போர் (நாடாளுமன்ற தேர்தல்)  2024ல் நடத்தப்படும்,

அதை எந்த மாநிலத் தேர்தலிலும் முடிவு செய்யாது. 

இது சாகேபுக்குத் (மோடிக்கும்) தெரியும்!

 இது எதிர்க்கட்சிகளை வீழ்த்த ஒரு தீர்க்கமான உளவியல் நன்மையை பறைச்சாற்றுவதாக உள்ளது

மக்களிடையே மாநில முடிவுகளைச் சுட்டிக்காட்டி, வெறித்தனத்தை உருவாக்குவதற்கான ஒரு புத்திசாலித்தனமான முயற்சியாகும்,

இதை நம்பாதீர்கள்,  அல்லது இந்த தவறான கதையின் ஒரு பகுதியாக இருக்காதீர்கள் என்றும் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.