கோட்டயம் குருபந்தரையில் கூகுள் மேப்ஸைப் பார்த்துக் கொண்டே பயணித்ததில் கார் நீரோடையில் விழுந்தது.

ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு இன்று அதிகாலை 3 மணியளவில் மூணாறில் இருந்து ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குருபந்தர குவே பாலத்திற்கு அருகில் நடைபெற்ற இந்த விபத்தில் கார் முழுவதும் ஓடையில் மூழ்கியது. பயணிகளை போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டனர்.

கூகுள் மேப்ஸைப் பார்த்து வாகனம் ஓட்டிச் சென்றதாகவும், காரை தண்ணீரில் இறக்கிய பிறகே விபத்து நடந்ததை உணர்ந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

இருட்டாக இருந்ததால் எதிரில் தண்ணீர் இருப்பதை உணரவில்லை. கனமழை காரணமாக பள்ளம் நிரம்பி வழிந்தது. வாகனம் ஓடையில் பல மணி நேரம் நீரில் மூழ்கிய நிலையில், காலை 11 மணியளவில் அப்பகுதி மக்கள் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது.

இதனிடையே, மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மழையுடன் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கூகுள் மேப் உதவியுடன் பயணம் செய்த மருத்துவர்கள் சிலர் இதேபோன்று ஆற்றில் மூழ்கி இறந்ததை அடுத்து இதுபோன்ற தொழில்நுட்ப உதவியுடன் பயணிப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்று அம்மாநில காவல்துறை எச்சரித்துள்ளது.