ரெமல் புயல் கரையைக் கடப்பதை அடுத்து கொல்கத்தா விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 9 மணி நேரத்திற்கு மூடப்படுகிறது.

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் நாளை தீவிரப்புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கேனிங்கிலிருந்து 480 கி.மீ தூரத்தில் கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ளது.

‘ரெமல்’ புயல் நாளை காலை வலுவான சூறாவளியாக உருவெடுத்து நாளை நள்ளிரவில் மேற்கு வங்க கடற்கரைக்கும் வங்கதேசத்தின் கெபுபாராவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெமல் புயல் காரணமாக வங்காள விரிகுடாவில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நள்ளிரவு முதல் 9 மணி நேரத்திற்கு கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவையை நிறுத்த அதிராரிகள் உத்தரவிட்டுள்ளனர்.