புனே-வில் கடந்த வாரம் குடிபோதையில் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில் 17 வயது வாலிபர் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பைக்கில் சென்ற இரண்டு மென்பொறியாளர்கள் இறந்த இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றவும் 17 வயது மகனுக்கு போர்ஷே சொகுசு காரை ஓட்டக்கொடுத்த அவருடைய தந்தை மற்றும் அவனுக்கு மது விற்பனை செய்த பாரின் உரிமையாளரையும் கைது செய்ய வலியுறுத்தப்பட்டது.

சுரேந்திர குமார் அகர்வால்

இந்த விவகாரத்தில் வாகனத்தை ஒட்டிய வாலிபரின் தந்தையும் புனே நகரின் பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான விஷால் அகர்வால் தேடப்பட்டு வந்தார்.

பின்னர், விஷால் அகர்வால் மற்றும் பார் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் இவர்களை வரும் ஜூன் 7 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், விஷால் அகர்வால் தலைமறைவாக இருக்கவும் விஷாலின் மகனுக்கு பதிலாக அந்தக் காரை டிரைவர் ஒருவர் ஒட்டியதாக செட்டப் செய்ய டிரைவரை பிடித்து வைத்து துன்புறுத்தியதாகவும் விஷாலின் தந்தை சுரேந்திர குமார் அகர்வால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

போர்ஷே கார் விபத்து விவகாரத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுரேந்திர குமார் அகர்வால் கடந்த 2009ம் ஆண்டு நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கும்பலுடன் சேர்ந்து சிவசேனா கவுன்சிலர் அஜய் போஷ்லே-வை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.

இப்போது சிவசேனா ஷிண்டே பிரிவில் இருக்கும் அஜய் போஷ்லே கொலை முயற்சி வழக்கை சிபிஐ ஏற்கனவே விசாரத்த நிலையில், தற்போது தனது 17 வயது பேரனை வழக்கில் இருந்து விடுவிக்க திட்டம் தீட்டியதாக சுரேந்திர குமார் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.