மைசூரு நட்சத்திர விடுதியில் மோடி தங்கியதற்கான வாடகை கட்டணம் ரூ. 80 லட்சம் ஓராண்டாக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால் ஹோட்டல் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புலிகள் திட்டத்தின் (Project Tiger) 50வது ஆண்டை கொண்டாடும் வகையில் 2023 ஏப்ரல் மாதம் மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MoEF) ஏற்பாடு செய்த இந்த 50 ஆண்டுகால புலித் திட்ட நிகழ்வு ஏப்ரல் 9 தேதி முதல் ஏப்ரல் 11ம் தேதி வரை நடைபெற்றது.

3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 100% மத்திய அரசு நிதி வழங்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய மாநில அரசு வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

MoEF மற்றும் NTCA இன் மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி குறுகியகால அறிவிப்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது மற்றும் நிகழ்வின் மொத்த செலவு ₹6.33 கோடியாக அதிகரித்தது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமரின் வருகை குறித்து திடீரென அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ராடிசன் ப்ளூ நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் மத்திய அரசு 3 கோடி ரூபாயை வழங்கிய நிலையில் மீதித்தொகை ரூ. 3.33 கோடி இதுவரை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மத்திய அரசின் MoEF மற்றும் NTCA அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய நிலையில் இதுவரை அதற்கான தொகை மாநில அரசுக்கு விடுவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பிரதமர் மோடி தங்கிய அறை வாடகை கட்டணம் ரூ. 80.6 லட்சம் ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக மே 21ம் தேதி மாநில வனத்துறை அமைச்சகத்துக்கு ராடிசன் ப்ளூ ஹோட்டல் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இந்த கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் இதற்கான வட்டியுடன் சேர்த்து செலுத்தவேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.