பெங்களூரு: பிரிக்ஸ் மாநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, நேரடியாக பெங்களூரு சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து  தெரிவித்தார். அப்போது நிலவின்   லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என அழைக்கப்படும் என அறிவித்தார்.  மேலும்,  சந்திரயான்-3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்  என்றவர்,  “சந்திரயான்-2” கால்தடங்களை பதித்த நிலவின் மேற்பரப்பில் உள்ள இடம் ‘திரங்கா’ என அழைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், விஞ்ஞானிகளின் உழைப்பிற்காக, தைரியத்திற்காக, இலக்கை அடைய வேண்டும் நோக்கத்திற்காக சல்யூட் என கூறி பெருமிதப்படுத்தினார்.

ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 22ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஜோகன்னஸ்பர்க் சென்றார். 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, நேரடியாக பெங்களூரு வருகை தந்தார். ஏற்கனவே சந்திரயான்3 விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்ட  சரித்திர நிகழ்வுகளை வெளிநாட்டில் இருந்து நேரையில் பார்த்த பிரதமர், சந்திரயான்3 திட்டம் வெற்றிபெற்றதை மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து, உரையாற்றினார்.

இதையடுத்து, சந்திரயான்3 வெற்றிக்கு வித்திட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இன்று காலை பெங்களூரு வருகை தந்தார். பெங்களூரு எச்ஏஎல் விமான நிலையம் வருகை தந்த பிரதமரை அதிகாரிகள் வரவேற்றனர்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்ட பிரதமர், பெங்களூருவில் தரையிறங்கிவிட்டேன். விஞ்ஞானிகளை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன், விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பால் விண்வெளியில் நம் தேசம்த சாதனை படைத்துள்ளது என தெரிவித்திருந்தார். இதையடுத்து, மோடி, இஸ்ரோக்கு வருகை தந்தார்.

இஸ்ரோ மையம் சென்ற  பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் வரவேற்றனர். சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், சந்திரயான் 3 மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார்.  இதையடுத்து, பிரதமரிடம் இஸ்ரோ தலைவர் நிலவில்  படம் பிடிக்கப்பட்ட  போட்டோக்களை வழங்கினார்.

பின்னர் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் பதித்தது குறித்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமாக பிரதமர் மோடிக்கு எடுத்துக் கூறினார். அதன்பின் பிரதமர் மோடிக்கு விஞ்ஞானிகள் நினைவுபரிசு வழங்கினார். அப்போது சந்திரயான் லாண்டரின் சிறிய மாதிரி வடிவத்தை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினர் வீர முத்துவேல் மற்றும் சோம்நாத் .அத்துடன் லாண்டர், ரோவர் எடுத்த புகைப்படங்களையும் நிலவின் தென்பகுதியில் விண்கலம் எங்கு உள்ளது என்பது குறித்த புகைப்படங்களையும்  பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினர்.

இதையடுத்து,  விஞ்ஞானிகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது,   உங்களுக்கு மத்தியில் இருப்பது, எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பல பிறவிகள் காத்திருந்து கிடைத்த மகிழ்ச்சி போன்று உள்ளது. உடல், மனம் என அனைத்தும் மகிழ்ச்சியால் பூரித்து கொண்டுள்ளது என சிலாகித்தார்.

இந்தியாவின் அடையாளத்தை நிலவில் பதித்ததன் மூலம், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இஸ்ரோ இடம் பிடித்துள்ளது.

சில நேரங்களில் மனிதர்கள் அதிக அளவில் உணர்ச்சிவசப்படுவார்கள். அதேபோன்ற உணர்ச்சி தற்போது எனக்கு ஏற்பட்டது.  நான் தென்ஆப்பிரிக்காவில் இருந்த போதிலும், மனம் முழுவதும் உங்களுடனேயே இருந்தது.  விஞ்ஞானிகளின் சாதனையின்போது, நான் இங்கே இல்லாதது, நான் உங்களுக்கு அநியாயம் செய்துவிட்டேன் போன்ற எண்ணம் ஏற்படும் அதனால்தான், அதிகாலையிலேயே உங்கள் அனைவரையும் அழைத்து தொந்தரவு செய்து விட்டேன் என்றார்.

மேலும்,  சந்திராயனுக்காக எவ்வளவு நேரம் வேலை செய்து இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும், உங்களுக்கு எவ்வளவு துன்பம் ஏற்பட்டிருக்கும் என்பதும் தெரியும், அதனால்தான் இந்தியா வந்ததுமே எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக உங்களை பார்க்க வேண்டும் தரிசனம் செய்ய வேண்டும் என நினைத்தேன் என்றார்.

சந்திரயான்3 வெற்றிக்காக உங்களுக்கு சல்யூட் அடிக்க நினைத்தேன். உங்களுடைய உழைப்பிற்காக, தைரியத்திற்காக, இலக்கை அடைய வேண்டும் நோக்கத்திற்கான, திடமான சிந்தனைக்கான சல்யூட் என்றார்.

இது ஒரு சாதாரணமான வெற்றியே அல்ல. இந்த அளவில்லா விண்வெளியில் இந்திய விஞ்ஞானிகளுக்கான சங்கநாதம் இது. இந்தியா நிலவில கால் வைத்திருக்கிறது. நம்முடைய நாட்டின் கவுரவத்தை நிலவில் நிலைநாட்டியிருக்கிறோம்.  இதுவரை யாரும் செய்யாத வேலையை செய்திருக்கிறோம். இதுதான் இன்றைய இந்தியா. உணர்ச்சி மிகுந்த பாரதம். விழிப்பு மிகுந்த பாரதம். புதிய வழியில் சிந்திக்கும் பாரதம் என்றவர்,

நிலவில் லேண்டர் தரையிறங்கிய இடம் சிவசக்தி என அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

 இஸ்ரோவில் விஞ்ஞானிகள் என்னென்ன சாதனை படைத்துள்ளீர்களோ, அவை அனைத்தையும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றவர், இந்தியாவின் அடையாளமான அசோக சின்னம் தற்போது நிலவில் பதிக்கப்பட்டுள்ளது என பெருமையுடன் கூறினார். உலக விஞ்ஞான வரிசையில் 3வது இடத்தில் இருந்த இந்தியா “சந்திரயான்-3” வெற்றிக்கு பிறகு முதல் இடத்திற்கு வந்துள்ளது என்று கூறியவர்,

“சந்திரயான்-3” லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக.23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.

“சந்திரயான்-3” திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே சிவசக்தி என்ற பெயர் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு ஒரு சாட்சி என்று விஞ்ஞானிகளை  பெருமைப்படுத்திய பிரதமர்,  நிலவில் கால்பதித்த 4வது நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுள்ளது.  இந்திய விண்வெளி துறையின் சாதனைகள், பங்களிப்பு இளைஞர்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது. * “சந்திரயான்-2” கால்தடங்களை பதித்த நிலவின் மேற்பரப்பில் உள்ள இடம் ‘திரங்கா’ என்று அழைக்கப்படும். இது இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் உத்வேகமாக இருக்கும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நினைவுபடுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீடியோ, புகைப்படம் உதவி: நன்றி ANI