திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிறு குற்றங்களில் ஈடுபட்டு சிக்கிக்கொள்பவர்களை பல்லை பிடுங்கி சித்ரவதை செயதுவந்த ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் முதல்வரின் உத்தரவின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுகுறித்து ‘தி நியூஸ் மினிட்’ மின்இதழ் நடத்திய விசாரணையில் சஸ்பெண்ட் செய்யப்பட ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சிறுவர்களின் பல்லையும் பிடுங்கியது அம்பலமாகியுள்ளது.

தி நியூஸ் மினிட் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது “சாலையில் சண்டையிட்டது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களில் இருந்த 17 மற்றும் 16 வயது சிறுவர்களின் பற்களை கல்லை வைத்து அரைத்துள்ளனர்.

மார்ச் 10 ம் தேதி சாலையில் சண்டையிட்ட இந்த இளைஞர்களை நான்கு மணி நேரம் விசாரித்த ஏ.எஸ்.பி. அங்கிருந்த சி.சி.டி.வி. பொறுத்தப்படாத அறையில் அடைத்து வைத்து பல்லை பிடுங்கி சித்ரவதை செய்துள்ளார்.

பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் இவர் அளித்த வினோத தண்டனையில் ஒரே வித்தியாசம், பெரியவர்களின் பல்லை பிடுங்கியுள்ளார், சிறுவர்களின் பல்லை பிடுங்காமல் அரைத்து விட்டிருக்கிறார்.

சிறுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் வரை அவர்களை சிறுவர்கள் என்றும் பார்க்காமல் கையில் விலங்கு போட்டு அடைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

தவிர, அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி. விசாரணை நடத்திய பிறகு வி.கே. புரம் காவல்நிலைய ஆய்வாளர் / உதவி ஆய்வாளர் உதவியுடன் இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தனர்.

மேலும், சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அவர்களது பெற்றோரிடம் இருந்து காரில் செல்ல ரூ. 3000 பணம் வாங்கியதாகவும். அதில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு சிறுவனின் பெற்றோரால் இவர்கள் கேட்ட பணத்தை தரமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

விசாரணைக்கு அழைத்துவரும் நபர்களின் பல்லை பிடுங்கிய ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அவர் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை மந்தகதியில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

கைதிகளிடம் விசாரணை மேற்கொள்ளும் முறை காரணமாக காவல்துறையைச் சேர்ந்த பல மூத்த அதிகாரிகள் மீது மனித உரிமை மீறப்பட்டதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் 2020 ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் தேர்வான பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்காமல் முட்டுபோட பல அமைப்புகள் வரிந்துகட்டி நிற்பது ஏன் என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.