சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் இன்று  காவல்துறையினர், துணைராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்துகின்றனர். பதற்றமான வாக்குச்சாடிகள் அமைந்துள்ள பகுதிகளில் மட்டும் நாளையும் கொடி அணிவகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,  இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. இதையடுத்து, பாதுகாப்பான முறையில் தோ்தலை நடத்துவதற்கு தமிழக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதன்படி, தோ்தல் பாதுகாப்பு பணியில் தமிழக காவல்துறையைச் சோ்ந்த 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபடுகின்றனா். இவா்களுடன் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற காவல்துறையினா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். மேலும், வாக்குப்பதிவு அன்று கூடுதலாக காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இதற்காக அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமாா் 10 ஆயிரம் போலீஸாா்  இன்று தமிழ்நாடு வருகை தந்துள்ளனர்.

தமிழ்நாட்டில், தேர்தலை அமைதியான முறையில்  நடத்தும் பொருட்டு, முன்னெச்சரிக்கையாக 21 ஆயிரம் ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வருவதால், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வெளி நபா்களை வெளியேற்றும் பணியை காவல்துறையினா் மேற்கொள்கின்றனா். இதையடுத்து ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், மேன்சன்களிலும் சோதனை நடத்த போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவத்தினா், தமிழகம் முழுவதும் பொது இடங்களிலும், பதற்றமான பகுதிகளிலும் புதன்கிழமை, வியாழக்கிழமை (ஏப்.18) கொடி அணிவகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக, மதுரையில் 511, தென் சென்னையில் 456, தேனியில் 381 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 181 வாக்குச் சாவடிகள் மிக பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பதற்றம், மிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனா். இதற்காக 190 கம்பெனி துணை ராணுவப்படையினா் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டு, மாவட்ட வாரியாக தேவைக்கு தகுந்தவாறு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனா்.

மிழகத்தில் மொத்தம் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியபட்டு உள்ளது.  இவற்றுள்  181 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக மதுரை தொகுதியில் 511 வாக்குச்சாவடிகளும், தென் சென்னையில் 456 வாக்குச்சாவடிகளும், தேனியில் 381 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. திருவள்ளூர் தொகுதியில் 170, வடசென்னையில் 254, மத்திய சென்னையில் 192, ஸ்ரீபெரும்புதூரில் 337, காஞ்சிபுரத்தில் 371 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறியப்பட்டுள்ளன.

பதற்றமான ஓட்டு சாவடிகளுக்கு, வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாகேவே துணை ராணுவம் அனுப்பி வைக்கப்படும். மேலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

பதற்றம் குறைந்த ஓட்டு சாவடிகள் உள்ள தொகுதிகளாக பெரம்பலுார் (55 ஓட்டு சாவடிகள்), விழுப்புரம் (76 ஓட்டு சாவடிகள்), திருச்சி (84 ஓட்டு சாவடிகள்) அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் 90 சதவீதத்துக்கு மேல் ஓட்டுப் பதிவாகி, அதில் 75 சதவீத ஓட்டுகள் ஒரு வாக்காளருக்கு சென்றிருந்தால், அதுபோன்ற வாக்குச்சாவடிகள் மிகப்பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியில் 39 வாக்குச்சாவடிகளும், வடசென்னையில் 18 வாக்குச்சாவடிகளும், அரக்கோணம் தொகுதியில் 15 வாக்குச்சாவடிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. திருவள்ளூர் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன என தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.