சென்னை:  வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மே1ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு பத்திரிகையாளர் சங்கங்கள்,  வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் உள்பட  பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.  இதுதொடர்பாக காவல்துறை அறிவிப்பில், தெளிவான தகவல் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் PRESS, MEDIA, ஊடகம் என்று அடையாளப் பதிவுக்கு தடையா? தெளிவுப்படுத்தவும் முறைப்படுத்தவும் சென்னை பெரு நகர காவல் துறைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்து சென்னை போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என மருத்துவர்கள், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமீபத்தில் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர், மருத்துவர் என அங்கீகாரமற்ற வகையில் ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டுப்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 198 மற்றும் மத்திய மோட்டார் வாகன சட்டம் விதி 50-ன் கீழ் வரும் மே 2-ம் தேதி முதல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீஸார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை பெரு நகர போக்குவரத்து காவல் துறை கடந்த 27-04-2024 அன்று வெளியீட்டுள்ள செய்தி வெளியீடு எண்.89/04/2024 பத்திரிகை, ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களிடையே பெரும் குழப்பத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகை, ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களில் PRESS/ MEDIA என்ற அடையாள ஸ்டிக்கர் இருக்கின்ற நடைமுறை நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. தமிழக அரசு, அரசின் செய்தித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு வாகன அடையாள ஸ்டிக்கர்களை வழங்கி வருகிறது. ஊடகங்களில் பணியில் இருக்கும்.

அனைவருக்கும் அரசின் வாகன அடையாள ஸ்டிக்கர்கள் வழங்குவதில்லை, நடைமுறையில் அது சாத்தியமும் இல்லை என்றிருக்கக் கூடிய நிலையில் காவல் துறையின் செய்தி வெளியீடு குழப்பங்களையும் அதிருப்தியையுமே உருவாக்கியுள்ளது. பத்திரிகை/ ஊடகங்களில் பணியாற்றுவோர் அவரவர் நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் / ஊடகவியலாளர்கள் என்பதை உரிய ஆவணங்கள் அடிப்படையில் அடையாளத்தை உறுதி செய்வதில் எவ்வித சிக்கலும், தயக்கமும் இருக்கப் போவதில்லை. இரவு நேரப்பணி, விபத்து, இயற்கை பேரிடர் என பல சூழல்களில், செய்தி சேகரிக்கும் பணியின் போது வாகனத்தில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் பத்திரிகையாளர்கள் என்று அடையாளம் காண்பதற்கு காவல்துறைக்கும் உதவியாக இருக்கிறது.

முறைகேடாக ,தவறாக, போலியாக பத்திரிகை /ஊடக அடையாளத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மாறாக சரியான திட்டமிடாமல் தெளிவில்லாமல் இப்படி ஒரு முன்னெடுப்பு எடுக்கப்படும் போது உண்மையான பத்திரிகையாளர்- காவல் துறையினர் நல்லுறவை நிச்சயமாக பாதிக்கச் செய்யும் என்றே கருதுகிறோம்.

சமீபத்தில் சென்னை பெரம்பூர் பகுதியில் எவ்வித காரணமும் இன்றி தீக்கதிர் நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த தமிழக அரசின் செய்தித் துறையால் வழங்கப்பட்ட பத்திரிகையாளர் வாகன ஸ்டிக்கரை வலுக்கட்டாயமாக போக்குவரத்து காவல் துறையினர் கிழித்துள்ளனர். இந்த தகவல் தற்போது தான் கவனத்திற்கு அறிய வந்ததால் இந்த செயலை மிகமோசமானதாக குறிப்பிடுவதுடன் கண்டிக்கின்றோம்.

பத்திரிகை, ஊடகங்களுக்கு தொடர்பில்லாதவர்கள், சமுக விரோதிகள் ஊடகம்/ PRESS என்று போலியாக பயன்படுத்துவதை சட்டப்படி உறுதியாக தடுக்க வேண்டும் என்பதில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் உறுதியாக இருப்பதுடன் அரசுடன், காவல் துறையுடன் முழு ஒத்துழைப்பு தரவும் தயாராக உள்ளோம். இந்த நடவடிக்கைக்கு வாகன தணிக்கை உள்ளிட்ட செயல்பாடுகளை முறையான திட்டமிடலுடன் செயல்படுத்தி போலியாக எவரும் பத்திரிகை/ ஊடக அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் காவல் துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

சென்னை பெரு நகர காவல்துறை பத்திரிகையாளர் / ஊடகவியலாளர் வாகன அடையாள ஸ்டிக்கர் தொடர்பாக தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றும், வாகன தணிக்கை மிக கண்ணியமாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது என்று சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதிதமிழன் தெரிவித்துள்ளார்.

 ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமாநிலத் தலைவர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் , வாகனங்களில் ‘டாக்டர்’ ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அனுமதி அளிக்க கோரி, சென்னை காவல் ஆணையருக்குகடிதம் எழுதியுள்ளார். அதில் , மருத்துவர்கள் பணி மனித உயிரை காப்பாற்றும் ஒரு இன்றியமையாத பணி ஆகும். அவசர காலங்களில் மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் மருத்துவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரிப்பதால் தேவையற்ற காலதாமதம் ஏற்படும்.

இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. சந்தேகப்படும் மருத்துவர்களை ஐடி கார்டை காட்ட சொல்லலாம். அனைத்து மருத்துவர்களையும் டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்பது மருத்துவர்களை அவமரியாதை செய்வதாகவும், உயிர் காக்கும் உன்னத பணியை தடுப்பதாகவும், மக்கள் உயிருடன் விளையாடுவதாகவும் மருத்துவர்கள் கருதுகிறார்கள். அதனால், அந்த சுற்றறிக்கையை உடனடியாக திருத்தம் செய்து, டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு விலக்களித்து, புதிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர். கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் எஸ்.அறிவழகன் ஆகியோர்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வழக்கறிஞர் என்ற வாகன பதிவு எண் கொண்ட ஹோலோகிராம் ஸ்டிக்கரை தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் விநியோகம் செய்கிறது உயர் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற வளாகங்களுக்குள் வழக்கறிஞர்கள் தங்கு தடையின்றி வந்து செல்லவும், வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் வெளிநபர்கள் தவறாக சட்ட விரோதமாக செயல்படுவதை தடுக்கும் வகையிலும், பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களை வேறுபடுத்திக் காட்டவுமே அங்கீகாரம் பெற்ற வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் இந்த ஸ்டிக்கர்களை வழங்குகிறது.

மத்திய மோட்டார் வாகன சட்ட விதி 50-ன் படி குறைபாடு உடைய நம்பர் பிளேட் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். கண்ணாடிகளில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அந்த விதிகள் தடையாக இல்லை. எனவே பார் கவுன்சிலில் பதிவு செய்யப்படும் வழக்கறிஞர்கள் தங்களது வாகனங்களில் பார் கவுன்சில் வழங்கும் ஸ்டிக்கரை பயன்படுத்திக்கொள்ள எந்த தடையும் இல்லை என போலீஸார் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ‘POLICE’ ஸ்டிக்கர் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!