சென்னை: கோவையில்  மக்களவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி தாக்கல் செய்த  மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்,  வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் விடுபட்டிருக்கும் போது ஏன் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பி வழக்கை தள்ளுபடி செய்தது.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ந்தேதி நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின்போது, பல இடங்களில் வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அங்கு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இநத் நிலையில், கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் என்பவர். தனது பெயர் விடுப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து, வாக்கு எண்ணிக்கையை தடை செய்ய வேண்டும்   சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்ற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இவர் தாக்கல் செய்த  மனுவில், மக்களவை தேர்தலில் வாக்களிக்க அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து கோவை வந்ததாகவும், வாக்களர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததாகவும் கூறியிருந்தார். கடந்த 2019 மக்களவை தேர்தலிலும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை தனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதே முகவரியில் வசிக்கும் தனது மகள் பெயர் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதேபோல், தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூடியிருந்தார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15ம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், அதுவரை கோவை மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு சுதந்திர கண்ணன் தரப்பில்  முறையீடு செய்யப்பட்டது. அதன்படி,வ ழக்கு இன்று  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா, நீதிபதி ஜி.சந்திரசேகரன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது .

இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகினார். அவர், தேர்தல் ஆணையம், கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  அப்போது சரி பார்த்திருக்கலாம். ஆனால்,  மனுதாரர் தொகுதியில் வசிக்காமல் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டியதுடன், கடந்த  2021 சட்டமன்ற தேர்தலின் போதே வாக்காளரின் பெயர், பட்டியலில் இருந்து  நீக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  ஏற்கனவே தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் விடுபட்டிருக்கும் போது ஏன் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் படிவம் 6ஐ பயன்படுத்தி வாக்களித்திருக்க முடியுமே, அதை   ஏன் பயன்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன், தேர்தல் முடிவடைந்து விட்டதால், தற்போது, அதற்கு தடை விதிக்க முடியாது  எனக்கு கூறி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.