சென்னை: தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எனப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டின்  தலைநகர் சென்னை உள்பட பல பகுதிகளில் பிரஸ் மற்றும் போலீஸ் ஒட்டப்பட்டு ஏராளமான வண்டிகள் ஓடுகின்றன. ஆனால், இதில் 75 சதவிகிதம் போலியானவை.  போலிஸ் அதிகாரிகளை மிரட்ட ரவுடிகளும், அரசியல் கட்சியினரும் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு அழிச்சாட்டியம் செய்து வருகின்றனர். இதுபோன்ற போலிகளை தடுக்க வேண்டும் என நீதிமன்றங்களும் உத்தரவிட்டு உள்ளன.

இந்த நிலையில் தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அருண் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தேசவிரோதிகள், குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு ‘போலீஸ்’ ஸ்டிக்கரை தவறாகப் பயன்படுத்துவதால் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்திருப்பதாகவும், இதன் மூலம் குற்ற செயல்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் இருப்பதை அனைத்து பிரிவு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளார். அதேபோல இது தொடர்பான விதி மீறல்கள் தீவிரமானதாக பார்க்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஏற்கெனவே கடந்த ஆண்டு இதுபோன்ற அறிவிப்பை அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருந்தார். அதாவது, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி ஒரு வழக்கில் சில உத்தரவுகளை பிறப்பித்தது. ‘காவல் துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களின் கண்ணாடிகளிலும் கருப்பு ஃபிலிம் ஒட்டக் கூடாது. காவலர்கள் தங்கள் தனிப்பட்ட வாகனத்தில் ‘போலீஸ்’ என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது’ என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள்   டிஜிபி  சைலேந்திரபாபு இருந்தபோது,  காவல் துறையின் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும்தனிப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், தற்போது  சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அருண் மீண்டும் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.