சென்னை: வாக்குப்பதிவு எந்திரங்கள் மையங்களுக்கு செல்லும் வரை அ.தி.மு.க.வினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், வாக்குச்சாடி முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில், நாளை மறுதினம் (ஏப்ரல் 19ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தமுறை 4 முனை போட்டி நிலவி வருகிறது. களத்தில் 950 வேட்பாளர்கள் உள்ளனர்.  அரசியல் கட்சி வேட்பாளர்கள் உடன்  609 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதில் ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் உள்ளனர்.

பொதுமக்கள் எளிதில் தங்களது வாக்குகளை செலுத்தும் வகையில், கடந்த தேர்தலைவிட இந்த ஆண்டு அதிக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும்   68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியபட்டு உள்ளது.  இவற்றுள்  181 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில்,  அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.  அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற தேர்தலையொட்டி, ”தமிழர் உரிமை மீட்போம்; தமிழ்நாடு காப்போம்”, “ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்” என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். எனது இந்த சுற்றுப் பயணத்தின்போது, மக்களைப் பாதுகாக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்பதை நிரூபிக்கின்ற வகையில் கோடானு கோடி மக்கள் திரண்டிருந்து, எங்கள் வாக்கு இரட்டை இலைக்கே, முரசு சின்னத்திற்கே என விண்ணதிர முழக்கமிட்டது, இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கழக உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்குச்சாவடிக்கு வரும் பொதுமக்களிடம் பண்போடும், பாசத்தோடும் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோர வேண்டும். மேலும், நம் முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். வாக்குப் பதிவு நாளன்று வாக்காளப் பெருமக்கள் அனைவரும் அன்று காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு செய்திடல் வேண்டும். வாக்குப்பதிவு நிறைவுபெற்று அதனை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசென்று சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருந்திடல் வேண்டும். எனதருமை வாக்காளப் பெருமக்களே, அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் வெற்றிச் சின்னமாம் ”இரட்டை இலை” சின்னத்திலும்; தே.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ”முரசு” சின்னத்திலும்; விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு ”இரட்டை இலை” சின்னத்திலும், உங்களது பொன்னான வாக்குகளை அளித்து, வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்து, புதிய வரலாற்றுச் சாதனையை படைத்திட வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.