சென்னை; மின் கட்டண உயர்வு நியாயமற்றது; திமுக அரசு மனசாட்சியோடு நடந்துகொள்ள வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக தலைவர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜிகேவாசன் உள்பட அரசியல் கட்சியினர் மின்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, மக்‍களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில், மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்‍கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததையடுத்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2 மாதங்களுக்‍கு 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 55 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் 145 ரூபாயும், 400 யூனிட் வரை பயன்படுத்தினால் 295 ரூபாயும், 500 யூனிட் வரை பயன்படுத்தினால் 310 ரூபாயும், 600 யூனிட் வரை பயன்படுத்தினால் 550 ரூபாயும், 700 யூனிட் வரை பயன்படுத்தினால் 595 ரூபாயும், 800 யூனிட் வரை பயன்படுத்தினால் 790 ரூபாயும், 900 யூனிட் வரை பயன்படுத்தினால் ஆயிரத்து 130 ரூபாயும் கூடுதல் கட்டணமாக வசூலிக்‍கப்படும்.  சமீபத்தில் சொத்து வரியை உயர்த்திய திமுக அரசு தற்போது மின்சார கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  “தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

மின்கட்டண உயர்வு குறித்து தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் தான் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினர் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என கருத்துத் தெரிவித்தனர். அதன்பிறகும் மின்கட்டணத்தை உயர்த்துவது நியாயமல்ல.

மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தக் கட்டண உயர்வு தேவையற்றது. மக்களின் இந்த மனநிலையை உணர்ந்து மின்கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அமமுக தலைவர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ள டிவிட்டில், ‘மின்கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெயரளவுக்கு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்திவிட்டு, அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். வீட்டு வாடகை, கடை வாடகை போன்றவை உயர்வதற்கும், ஏற்கனவே நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவதற்குமே மின் கட்டண உயர்வு வழிவகுக்கும். மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் தி.மு.க அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும் என பதிவிட்டுள்ளார்.

தமாக தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,   தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் இன்று முதல் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது மிகவும் கண்டிக்கதக்கது. இது ஏழை , எளிய மக்கள் மீது அரசிற்கு அக்கரையில்லை என்பதை காட்டுகிறது. கொரோனா தாக்கத்தில் இருந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு , அதில் இருந்து மக்கள் தற்பொழுதுதான் மெல்ல, மெல்ல தேறிவருகிறார்கள். இந்நிலையில் மின் கட்டணம் உயர்வை அறிவித்தது. அதில் முற்கட்டமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது மக்களிடமும், தொழில் நிறுவனங்களிடமும் கருத்து கேட்டது . அப்பொழுது, பொது மக்களும், தொழில் நிறுவனங்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது நிறுவனங்களும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில் சம்பிராதய சடங்காக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, அவற்றை பரிசீலனை செய்யாமல் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்து இருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. மின்சார வாரியம் தங்களின் நஷ்ட கணக்கை நேர் செய்ய எத்தனையோ வழிகள் இருந்தும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு , ஏழை , எளிய மக்களின் தலையில் மின்கட்டண உயர்வை சுமத்துவது எந்தவிதத்தில் நியாயம்?. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம், மாதம், மாதம் மின் நுகர்வு அளவிடு செய்ய வழிவகை செய்வோம் என்ற தங்களின் தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு?

திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளிலில் இருந்தே மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது . கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக , மக்களின் ஆதரவை இழந்து வரும் அரசாக திகழ்கிறது. தமிழக அரசு , மக்களை நேரடியாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடடியாக கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.