சென்னை: சென்னையில் அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், அம்மா உணவகம் விரைவில் மூடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரவு உணவு நிறுத்தப்பட்டுள்ளது ஏழை மக்கள் கட்டிட பணியாளர்களுக்கு பெரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. வார்டுக்கு 2 வீதம் 200 வார்டுகளில் மொத்தம் 400 உணவகங்களும், 7 அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் செயல்படுகிறது. இந்த உணவகம், அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இங்கு  ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு கலவை சாதங்கள், இரவில் 3 ரூபாய்க்கு சப்பாத்தி போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இது ஏழை மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா ஊரடங்கின் போது அம்மா உணவகம், ஏழை மக்களின் பசிப்பிணியை போக்கிய  அட்சய பாத்திரமாக விளங்கியது.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், கலைஞர் உணவகம் கொண்டு வரப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும், சென்னையில் அம்மா உணவகம் அடித்து நொறுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது மக்களிடையே அதிர்ச்சியையும், திமுக மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்தியதால், மீண்டும் அம்மா உணவகம் சரி செய்யப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், அம்மா உணவகங்களுக்கு போதிய அளவில் நிதி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று இங்கு பணியாற்றும் ஊழியர்களால் குற்றம் சாட்டப்பட்டு வந்தது., நிதி நிலையை சுட்டிக்காட்டி, உணவு பொருட்கள் குறைக்கப்பட்டதால், குறைந்த அளவிலேயே உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

நாங்கள் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் இன்று அம்மா உணவகம் இருக்காது! முதலமைச்சர் ஸ்டாலின்…

இதனால் உணவு வேண்டி அம்மா உணவகம் வருவோருக்கு போதிய உணவு விநியோகம் செய்ய முடியாத நிலை தொடர்ந்து வந்தது. இந்த நிலையில், தற்போது இரவு வழங்கப்பட்டு வரும் சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சப்பாத்திக்கு தேவைப்படும் கோதுமை வினியோகம் செய்யாததால், நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதற்கு பதில் தக்காளி சாதம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால், இரவு உணவான சப்பாத்தியை விரும்பியே ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் அம்மா உணவகத்தை நாடிய நிலையில், தற்போது, அவர்களின் வருகையும் குறைந்துள்ளது. இதனால் சில பகுதிகளில் இரவு உணவு நிறுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக 3 நேரமும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய வந்த பல  அம்மா உணவகத்தில் தற்போது இரண்டு நேரம் மட்டுமே குறைந்த அளவிலேயே உணவு விநியோகிகப்பட்டு  வருகிறது. விரைவில் இதுவும் குறைக்கப்பட்டு, விரைவில் அம்மா உணவகம் மூடு விழா நடத்தப்படும் என்று அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

மாநில அரசு மற்றும் மாநகராட்சியின் இந்த நடவடிக்கையானது, நிதி நிலையை காரணம் காட்டி அம்மா உணவகத்துக்கு மூடு விழா நடத்தும் திட்டத்தின் முன்னேற்பாடு என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கலைஞர் உணவகம் திட்டத்தை கொண்டு வர ஏதுவாக, அம்மா உணவகம் திட்டத்துக்கு மூடுவிழா நடத்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முயற்சித்து வருவது இதன்மூலம் உறுதியாகி உள்ளது.

அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

‘அம்மா உணவகம்’ விரைவில் ‘கலைஞர் உணவகமாக’ மாற்றப்படுகிறது? பெயர் பலகைகள் மறைப்பு…