சென்னை: தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம் விரைவில் கலைஞர்  உணவகம் என மறு பெயரிடப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையில், சென்னையில் உள்ள பல அம்மா உணவகங்களில்  அம்மா என்ற பெயர் பேப்பர் மூலம் ஒட்டி மறைக்கப்பட்டு இருப்பது தொடர்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதையொட்டி முதல்வராக மு.க.ஸ்டாலின் 7ந்தேதி பதவி ஏற்கிறார். இதற்கிடையில், நேற்று (5ந்தேதி) சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகம் திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டு பெயர் பலகை கிழிக்கப்பட்டது. இது சர்ச்சையானது.  இதையடுத்து, அந்த பெயர் பலகை மீண்டும் வைக்கப்பட்டது.

முன்னதாக, தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்த விதிமுறைகளாக அம்மா உணவகங்களில், உள்ள அம்மா என்ற பெயரும், ஜெயலலிதா பெயரும், பேப்பர்கள் ஒட்டி மறைக்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவடைந்ததும், அவைகள் அகற்றப்பட்டு, வழக்கம்போல செயல்பட்டு வந்தன.  ஆனால், பல பகுதிகளில் ஒட்டப்பட் அம்மா என்ற பெயர் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

இதற்கிடையில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கலைஞர் உணவகம் அமைப்பதற்காகவே, அம்மாவின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் இல்லாத போதிலும், பல அம்மா உணவகங்களில்,  ஒட்டப்பட்டுள்ள பேப்பர்களை அகற்றக்கூடாது என வாய்மொழி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசாங்கத்தால் விரைவில் எடுக்கப்படும் கொள்கை முடிவைத்தொடர்ந்து, அம்மா உணவகம், ‘அண்ணா’ கேண்டீனாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  திமுக செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி. டி கே எஸ் இளங்கோவன், அம்மா கேன்டீன் பெயரை மாற்றும் திட்டத்தை உறுதிப்படுத்தினார்.  “நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியபடி மேம்பட்ட வடிவிலான கேண்டீன்கள் திறக்கப்படும். இதுபோன்ற கேன்டீன்களுக்கு ஒரே ஒரு பெயர் மட்டுமே இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். 500 ‘கலைக்னர்’ கேன்டீன்கள், அம்மா கேண்டீன்களைப் போலவே, ஏழை மற்றும் நலிந்த மக்களுக்கு மானிய விலையில் உணவு வழங்கும் என்றும் கூறினார்.

இதன் காரணமாக, அம்மான கேன்டீன் இனி அண்ணா கேன்டீன்களாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.