நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள ‘துணிவு’ ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 பொங்கல் பண்டிகைக்கு ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ ஆகிய இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

விஜய் நடித்த வாரிசு படம் ஜனவரி 12 ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

பொங்கலுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில் துணிவு படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு வாரிசு படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் தேதிக்கு முந்திய தினம் வெளியாகும் என்ற அறிவிப்பு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இரண்டு படங்களின் டிரெய்லரும் ரிலீசான நிலையில் அட்டகாசம், அமர்க்களம் படங்களைப் போன்று அஜித்தின் துணிவு U/A சான்றுடன் பழைய பாணியில் ஒரு பேண்டஸி படமாகவும், வாரிசு U சான்றுடன் பழைய சினிமா பாணியில் கதையோட்டத்துடன் இருப்பதாகவும் டிரெய்லரை பார்த்த சினிமா ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ரிலீசுக்கு முன்பே போட்டியில் இறங்கியிருக்கும் இவ்விரு படங்களுக்கான வரவேற்பும் வசூலும் எப்படி இருக்கும் என்பது பொங்கலுக்கு பின் தான் தெரியும் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.