சென்னை: திரைப்படத்தின் வருவாய் இழப்பை ஏற்காத நடிகர்களைக் கண்டித்து வரும் மே 02- ஆம் தேதி அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், படம் தோல்வி அடைந்தால், அதுகுறித்து கவலைப்படாமல், தனது வருவாயை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதை தடுக்கும்வ கையில், தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக வரும் காலங்களில் நடுத்தர மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை “Revenue Share” முறையில் மட்டுமே தயாரிப்பது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று (ஏப்ரல் 26) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன் தலைமையேற்றனார்., பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், துணை தலைவர்கள் ஆர்.கே.சுரேஷ், கமலகண்ணன், செயலாளர்கள் கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் சுஜாதா விஜயகுமார் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்துக் கொண்டனர். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.வி.சேகர், தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டடோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஏ.சந்திரசேகர், “தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; இந்த சங்கம் வலுமையாக இருக்க வேண்டும்; இந்த சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வந்து அதிகளவில் வாக்களித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
அதைத தொடர்ந்து பேசிய கலைப்புலி எஸ்.தாணு, “நாம் ஒன்றுபட்டு செயல்பட்டால் தான் வெற்றி கிடைக்கும். சங்கம் கொண்டு வந்த அனைத்து தீர்மானமும் நெல்மணிகள் போல் தான் இருக்கும். வருவாய் ஈட்டுவதற்கு நீங்கள் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஏற்கெனவே கொண்டு வந்துள்ள தீர்மானங்கள் சிறப்பானவை. உங்களுக்கு (சங்கத்திற்கு) ஒத்துழைப்பு அளிப்பேன்” என்றார்.
இதைத்தொடர்ந்துபேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் உறுப்பினர் தனஜெயந்தன் பேசும்போது, “தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய நடிகர்கள் “Revenue share” அடிப்படையில் தான் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் அதிகளவு சம்பளம் வாங்குகிறார்கள். அவர்களும் “Revenue share” உடன் சம்பளம் பெறும்போது தமிழ் சினிமா அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு செல்லும். அதற்காக தான் மே 02- ஆம் தேதி அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது என்றார்.
மேலும், படத்தில் இடம்பெறும் ஆடியோ உரிமைப் பெற திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் முறையாக தளத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் இல்லையென்றால் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினரே முன்வர வேண்டும்; சின்ன திரைப்படங்களை வெளியிட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களே ஒரு ஓடிடி தளத்தைத் தொடங்க வேண்டும்;
Audio Rights, Audio label, OTT platform ஆகியவற்றை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமே உருவாக்க வேண்டும். தமிழ் சினிமா அடுத்தக் கட்டத்திற்கு செல்ல வேண்டும், அடுத்த ஆறு மாதத்தில் தமிழ் நடிகர்கள் அவர்களது “Revenue share” அடிப்படையில் தான் சம்பளம் பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இறுதியில் பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்குமரன், “யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சினிமா படப்பிடிப்புகள் மேற்கொள்ளப்படும். இப்போதுக்கூட ஐசரி கணேஷ் மற்றும் நடிகர் சிம்பு உள்ளிட்டோர் பிரச்சனைகளை யாருக்கும் தெரியாமல் தீர்த்து வைத்தோம். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இனி சிறப்பாக செயல்படும்” என்று கூறினார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவே்ற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026-2029- ஆம் ஆண்டிற்கான தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்ததற்காக ஒய்வு பெற்ற நீதியரசர் ராஜேஸ்வரனுக்கும், அவரது உதவியாளர்களுக்கும், சிறப்பான முறையில் அமைதியாக தேர்தலை நடத்திட ஒத்துழைப்பு தந்த காவல்துறையினருக்கும், அரசு அதிகாரிகள் மற்றும் கந்தசாமி நாயுடு கல்லூரி நிர்வாகத்தினர், கல்லூரி உதவியாளர்களுக்கு பொதுக்குழு நன்றி தெரிவித்து கொள்கிறது.
சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் மானியத்தொகையைக் கடந்த பத்து ஆண்டுகளாக அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. அந்த மானியத்தொகையினை புதியதாகப் பதவியேற்க இருக்கும் தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்கிட வழிவகை செய்திட வேண்டும்.
தமிழ்த் திரைப்பட மறுசீரமைப்பு குறித்து தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம். தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம் ஆகிய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இனிவரும் காலங்களில் புதிய ஒப்பந்தத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் தற்போது ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ளது போல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் “Revenue Share” முறையில் தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து படங்களில் நடிக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் நடுத்தர மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை “Revenue Share” முறையில் மட்டுமே தயாரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விஷயத்தை சினிமாத் துறையில் உள்ள அனைவரின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவும், நடிகர் சங்கம் தொடர்ந்து இனி இதே போக்கை கடைபிடித்தால் தொடர் வேலை நிறுத்தம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
[youtube-feed feed=1]