சென்னை, மே 11: தமிழ்நாடு சட்டமன்றம் திங்கள்கிழமை காலை கூடிய நிலையில், 17-ஆவது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள சோழவந்தான் (தனி) தொகுதி எம்.எல்.ஏ. மு.வி. கருப்பையா, உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

முன்னதாக, மு.வி. கருப்பையா ஞாயிற்றுக்கிழமை இடைக்கால சட்டப்பேரவைத் தலைவராக பதவியேற்றார். முதல்வர் விஜயின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ஆர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள், தலைமைச் செயலர் எம். சாய்குமார், ஆளுநரின் செயலர் கிர்லோஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடவுள் பெயரால் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட கருப்பையாவுக்கு, ஆளுநரும் முதல்வரும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மூத்த உறுப்பினர் கட்சி பேதமின்றி இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்படும் மரபு பின்பற்றப்படுகிறது. இடைக்கால சபாநாயகர், புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது உள்ளிட்ட பொறுப்புகளை வகிப்பார்.

சோழவந்தான் (தனி) தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட மு.வி. கருப்பையா, திமுக வேட்பாளர் ஆ. வெங்கடேசனை 2,678 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூரைச் சேர்ந்தவர்.
முன்னதாக அதிமுகவில் இருந்த அவர், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளரை 36,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்தார். பின்னர் அதிமுகவில் வாய்ப்பு கிடைக்காததால் விலகி, தேர்தலுக்கு முன்பு தவெகவில் இணைந்தார்.

[youtube-feed feed=1]