“ஒரு டீ போட்டுட்டு வாங்க!” என்று நண்பரை அழைப்பது இந்தியாவில் சாதாரண விஷயம். ஆனால் சீனாவின் ‘டா ஹாங் பாவோ’ டீயை யாராவது “ஒரு கப் போடுங்க” என்று கேட்டால், முதலில் அவர்களது வங்கிக் கணக்கு இருப்பையே பார்க்க வேண்டியிருக்கும்!

சீனாவில் விளையும் ‘டா ஹாங் பாவோ’ (Da Hong Pao) என்ற அரிய வகை தேயிலை, உலகிலேயே மிக விலை உயர்ந்த டீயாக கருதப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோவுக்கு ரூ.9 கோடிக்கும் மேல் என கூறப்படுகிறது.

20 கிராம்… ரூ.1.23 லட்சம்!

ஒரு கிலோ சாதாரண தேயிலை இந்தியாவில் சில நூறு ரூபாய்க்கு கிடைக்கும். ஆனால், 20 கிராம் டா ஹாங் பாவோ ரூ.1.23 லட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கிராம் டீயின் விலை ரூ.1.2 லட்சத்துக்கும் மேல்!

தங்கம் விலை உயர்ந்தது என்று நினைத்தால், இந்த டீ அதையும் மிஞ்சிவிட்டது. எடையை ஒப்பிட்டால், தங்கத்தை விட சுமார் 30 மடங்கு அதிக மதிப்புடையது என்கிறார்கள்.

ஆறு மரங்கள்தான்… அதனால்தான் இந்த விலை!

இந்த டீ இவ்வளவு விலை உயர்ந்ததற்கு காரணம், அது விளையும் அசல் தாய் மரங்கள் உலகிலேயே ஆறு மட்டுமே இருப்பதுதான்.

இதனால், 2006-ஆம் ஆண்டு சீன அரசு அந்த மரங்களை வணிக ரீதியாக பயன்படுத்த தடை விதித்தது. அந்த ஆறு மரங்களும் தேசிய பாரம்பரியச் சொத்தாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு ரூ.142 கோடி மதிப்பில் காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.

இப்போது கிடைப்பது அசல் அல்ல… ‘வாரிசு’ டீ!

தற்போது சந்தையில் கிடைக்கும் ‘டா ஹாங் பாவோ’ தேயிலை, அந்த தாய் மரங்களின் கிளைகளை ஒட்டுக்கட்டி வளர்க்கப்பட்ட புதிய செடிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதனுடன் வுயி மலைப்பகுதியில் விளையும் உயர்தர தேயிலை இலைகளும் சேர்க்கப்படுகின்றன.

ஒரு டீயின் பின்னால் ஒரு ராஜகதை!

சீன நாட்டுப்புறக் கதையின்படி, ஒரு இளம் அறிஞரின் உயிரைக் காப்பாற்றியதே இந்த டீ. பின்னர் அதே டீயால் சீன மன்னரும் குணமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பரிசாக மன்னர் வழங்கிய சிவப்பு அரச உடையை, அந்த டீச் செடிகளின் மீது போர்த்தியதால், அதற்கு ‘டா ஹாங் பாவோ’, அதாவது ‘பெரிய சிவப்பு அங்கி’ என்ற பெயர் வந்ததாக ஒரு புராணக் கதை கூறுகிறது.

இந்தியாவிலும் விலை உயர்ந்த டீ உண்டு!

இந்தியாவில் கேரள மாநிலம் மூணாறில் விளையும் வெள்ளை தேயிலை (White Tea) உலகப் புகழ் பெற்றது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துகள் அதிகம் இருப்பதால், உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.

இதன் விலையும் குறைவல்ல. 100 கிராம் வெள்ளை தேயிலை சுமார் ரூ.2,000 வரை விற்கப்படுகிறது.

ஆனால்… டா ஹாங் பாவோவின் விலையைப் பார்த்த பிறகு, மூணாறு வெள்ளை டீ கூட “நான் ரொம்ப சுலபம்!” என்று சொல்லும் அளவுக்குதான் இருக்கிறது!