ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் குத்ரத்துல்லா, போட்டி முடிந்த பிறகு அணி தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், பாகிஸ்தான் குத்துச்சண்டை கூட்டமைப்பு (PBF) மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கத்தைச் சேர்ந்த வட்டாரங்கள் கூறுகையில், தனது எடைப்பிரிவு போட்டியில் விளையாடிய குத்ரத்துல்லா, பின்னர் ஓட்டலில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார். அவரது பாஸ்போர்ட் அணியின் மேலாளரிடமே இருந்தபோதும் அவர் மாயமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தன.

இது போன்ற சம்பவம் பாகிஸ்தான் அணியில் முதல் முறையல்ல. 2022-ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும், சுலைமான் பலோச் மற்றும் நசீருல்லா கான் ஆகிய இரண்டு குத்துச்சண்டை வீரர்கள் மாயமாகினர். அப்போதும் அவர்களது பாஸ்போர்ட்கள் அணித் தலைவரிடம் இருந்ததாக கூறப்பட்டது.

அதேபோல், 2024-ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற உலக ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியின்போது, ஆசிய தங்கப் பதக்கம் வென்ற ஜோஹைப் ரஷீத், தனது அறைத் தோழரின் வெளிநாட்டு நாணயம் மற்றும் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்று மாயமானதாகவும் புகார் எழுந்தது.

இந்த நிலையில், 36 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வென்று நாடு திரும்பியுள்ளது. அந்தப் பதக்கத்தை மகளிர் குத்துச்சண்டை வீராங்கனை பாத்திமா ஜெஹ்ரா வென்றார்.