ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்க செனட்டில் இரு கட்சிகளையும் சேர்ந்த செனட்டர்கள் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளனர். ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் சுங்கவரி விதிக்க இந்த மசோதா வழிவகுக்கிறது. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
“லிண்ட்சே கிரஹாம் ரஷ்யா பொறுப்புக்கூறு மசோதா” என பெயரிடப்பட்டுள்ள இந்த சட்ட முன்வடிவை செனட்டர்கள் ரிச்சர்ட் ப்ளூமெந்தால், ஜீன் ஷஹீன், ரோஜர் விக்கர், கேட்டி பிரிட் உள்ளிட்டோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த மசோதாவுக்கான முயற்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுத்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக செனட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மசோதாவில் என்ன இருக்கிறது?
இந்த மசோதா வெறும் சுங்கவரி விதிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல. ரஷ்யாவின் பொருளாதாரம், எரிசக்தி துறை, நிதித் துறை, பாதுகாப்புத் துறை, முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் அதிபர் விளாடிமிர் புதின் வரை கடுமையான தடைகள் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சுங்கவரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நிர்வாகத்திற்கு இந்த மசோதா வழங்குகிறது. இதனால் சீனா, இந்தியா, ஸ்லோவாகியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்ய இயற்கை எரிவாயுவை அதிக அளவில் வாங்கும் நாடுகளையும் இந்த மசோதா குறிவைக்கிறது. இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து 15 சதவீதத்திற்கும் குறைவாக எரிவாயு இறக்குமதி செய்யும் மற்றும் இறக்குமதியை ஏற்கனவே குறைத்து வரும் நாடுகளுக்கு விலக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கவரி எவ்வளவு என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதனை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பின்னர் தீர்மானிப்பார் என செனட்டர்கள் விளக்கியுள்ளனர்.
பழைய மசோதாவிலிருந்து என்ன வித்தியாசம்?
முந்தைய வரைவு மசோதாவில் 60-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போதைய மசோதா ரஷ்ய எண்ணெய் வாங்கும் 5 நாடுகள் மற்றும் எரிவாயு வாங்கும் 5 நாடுகளை மட்டும் மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லிண்ட்சே கிரஹாமுக்கு அஞ்சலி
லிண்ட்சே கிரஹாமுடன் பல ஆண்டுகள் பணியாற்றிய செனட்டர் ரோஜர் விக்கர், “இது கிரஹாமின் மிகப்பெரிய சாதனை” என்று பாராட்டினார்.
செனட்டர் டெட் க்ரூஸ், “உயிரிழப்பதற்கு முன்பு அதிபர் டிரம்புடன் இந்த மசோதா குறித்து கிரஹாம் நேரடியாக ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த மசோதாவை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவது அவருக்கு செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும்” என்றார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை சுட்டிக்காட்டிய செனட்டர்கள், இந்த மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். ஆகஸ்ட் இறுதிக்குள் அமெரிக்க காங்கிரஸ் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் நிலைப்பாடு
2022-ம் ஆண்டு முதல் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனை நிறுத்த வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொதுமக்களுக்கு மலிவான எரிபொருள் கிடைப்பதற்காகவே இந்த கொள்முதல் மேற்கொள்ளப்படுவதாக இந்தியா விளக்கம் அளித்து வருகிறது. மேலும், இதன் மூலம் உலகளாவிய எண்ணெய் விலைகளையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது என்றும் இந்தியா வாதிட்டு வருகிறது.
இதற்கிடையில், ரஷ்யாவுக்கு எதிரான இந்த கடுமையான தடைகள் மசோதாவுக்கு டிரம்ப் நிர்வாகம் ஆதரவு தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறியுள்ளன.