டெல்லி: பனாமா பேப்பர் விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாக  கடந்த 2016ம் ஆண்டு  பனாமா பேப்பர்சில் நடிகை ஐஸ்வர்யாராய் உள்பட பல செல்வந்தர்களின்  பெயர்கள்   வெளியானது.   இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, 2016-ம் ஆண்டு ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் பனாமாவில் பணத்தை முடக்கி வைத்துள்ளது உள்பட முக்கிய ஆவணங்கள் வெளியானது. அதில்,  வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்தவர்களின் பட்டியல் வெளியானது. பனாமாவில் முதலீடு செய்தவர்களின் பெயர் பட்டியலை ஜெர்மனியை சேர்ந்த பத்திரிகை ஒன்று வெளியிட்டது. இந்த பட்டியலில் பிரபல நடிகையும், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா ராய், அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்திருப்பதாகவும், மேலும்,  இந்திய தொழிலதிபர்கள், செல்வந்தர் கள் என சுமார் 500 பேரின் பெயர்கள் வெளியானது. இவர்கள் பனாமா நாட்டில் கருப்பு பணத்தை முதலீடு செய்ததாக புகார் எழுந்தது.

இந்த ஆவணங்களின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பனாமா பேப்பர்ஸ் தொடர்பாக விசாரணைக்கு  அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஐஸ்வர்யா ராய்க்கு சமமன் அனுப்பப்பட்டது. “அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் பிரிவு 37ன் கீழ் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி மும்பையில் உள்ள ஐஸ்வர்யா ராயின் வீட்டிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில்,  டிசம்பர் 20 ஆம் தேதி ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், இந்த சம்மனுக்கு ஐஸ்வர்யா தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அமலாக்கத்துறை இருமுறை சம்மன் அனுப்பியபோது, விசாரணையை ஒத்திவைக்க ஐஸ்வர்யா ராய் கோரி இருந்த நிலையில், இன்று ஆஜராவாரா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

பனாபா பேப்பர்ஸ் என்பது என்ன?

பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபென்செக்கா என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் கடந்த 2015ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் ஊடகத்தில் வெளியானது. அதில், மொசாக் ஃபென்செக்கா  நிறுவனமானது, உலக செல்வந்தவர்களை கண்டறித்து, அவர்களின் கருப்பு பணத்தை, வெளிநாடு களில் பத்திரமாக சேமித்து வைக்கவும்,  வரி ஏய்ப்பு செய்வதற்கும்  உதவி வந்தது தெரிய வந்தது. இந்த நிறுவனமானது, உலகின் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த தலைவர்கள், செல்வந்தர்கள், செலிபிரிட்டிகள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு உதவி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக 80 நாடுகளைச் சேர்ந்த சுமார் 107 ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள், இந்த நிறுவனத்தின் ஆவணங்களை ஆய்வு செய்து, பனாமா பேப்பர்பஸ் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டனர்.  அதில், இந்தியா, பாகிஸ்தான் உள்பட சுமார் 2லட்சத்துக்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் சிக்கியிருந்தது தெரிய வந்தது.

 அரசியல்வாதிகள், தேசத் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருடன் பெரு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், வங்கிகள் மட்டுமின்றி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரன், கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் தம்பி ஷாபாஸ் ஷெரீப், மகள் மரியம், இந்தியாவைச் சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், அவருடைய மாமனார் அமிதாப் பச்சன், டிஎல்ஃப் நிறுவனத்தின் தலைவர் கேபி சிங் மற்றும் அவருடைய ஒன்பது குடும்ப உறுப்பினர்கள், அப்பல்லோ டையர்ஸின் ப்ரமோட்டர்கள், கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி ஆகியோரின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் இரண்டு அரசியல்வாதிகளின் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தினைச் சேர்ந்த ஷிர்ஷிர் பஜோரியா மற்றும் டெல்லியில் இருந்து செயல்படும் லோக்சத்தா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் ஆகியோரின் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஆவணங்களே பனாமா பேப்பர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.