டெல்லி: மக்களவையில் இன்று தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்  செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்ததால், மக்களவை மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே வேளாண் சட்டங்கள் வாபஸ் உள்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்று வருகின்றன.

இன்று அவை கூடியதும்,  தேர்தல் சீர்திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்பட  எதிர்க்கட்சிகள்  கோரிக்கை விடுத்தன. ஆனால், அதை கண்டுகொள்ளாமல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது சபையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ஆதார் என்பது வசிப்பிடச் சான்றாக மட்டுமே இருக்க வேண்டும். அது குடியுரிமைக்கான சான்று அல்ல.
வாக்காளர்களுக்கு ஆதார் கேட்கும் நிலையில் நீங்கள் இருந்தால், நீங்கள் பெறுவது குடியுரிமையைப் பிரதிபலிக்கும் ஆவணம் அல்ல. குடிமக்கள் அல்லாதவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வாய்ப்பு வழங்குவதாகும் என குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து தேர்தல் சீர்திருத்த மசோதா  எதிராக எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்படுவதாக சபையை நடத்திய வந்த சபாநாயகர் ராஜேந்திர அகர்வால் அறிவித்தார்.