மகபூபாபாத்: தெலங்கானாவில் மொட்டை அடித்த தொழிலாளியை முகஅடையாள செயலி அடையாளம் காணாததால், பெண் தொழிலாளியின் தலைமுடியை பயன்படுத்தி வருகை பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) தொழிலாளர்களுக்கு முகஅடையாளம் வாயிலாக வருகை பதிவு செய்யும் முறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மகபூபாபாத் மாவட்டம், கோமட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவர், கோண்டகட்டு ஆஞ்சநேயர் கோவிலில் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தியதால் மொட்டை அடித்திருந்தார்.
இந்நிலையில், அவர் வேலைக்கு சென்றபோது, முகஅடையாள செயலி அவரை அடையாளம் காணவில்லை. பலமுறை முயன்றும் வருகை பதிவு செய்ய முடியாததால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது அங்கிருந்த பெண் தொழிலாளர் ஒருவர், தனது தலைமுடியை ஸ்ரீனிவாஸின் தலையின் மீது போட்டு மறைத்தபடி நிற்கச் செய்தார். இதையடுத்து மீண்டும் ஸ்கேன் செய்தபோது, செயலி அவரை அடையாளம் கண்டு வருகையை பதிவு செய்தது.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், தோற்றத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டால்கூட முகஅடையாள தொழில்நுட்பம் செயலிழக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
[youtube-feed feed=1]