இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் அறிமுகமாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் பணப்புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி மீண்டும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நிர்வாக குழு கூட்டங்களில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் காகித நோட்டுகளை விட, பாலிமர் நோட்டுகளை தயாரிக்கும் செலவு குறைவாக இருப்பதுடன், அவை நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இருக்கும் என்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மேலும், ஏ.டி.எம்., இயந்திரங்களிலும் இந்த பிளாஸ்டிக் நோட்டுகளை வழங்கும் வசதியை ஏற்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், பாலிமர் நோட்டுகளை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் 2024-25 ஆண்டு அறிக்கையின்படி, காகித கரன்சி நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு முந்தைய ஆண்டை விட அதிகரித்து ரூ.6,372 கோடியாக உயர்ந்துள்ளது. அதிகளவில் நோட்டுகள் அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டதே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல், சேதமடைந்த மற்றும் பழைய நோட்டுகளை அகற்றுவதிலும் சிக்கல் அதிகரித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் 23.8 பில்லியன் சேதமடைந்த நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள் ஆகும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், நாட்டில் ரொக்கப் பணத்தின் பயன்பாடும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 2012-ம் ஆண்டு ரூ.10 பாலிமர் நோட்டுகளை 5 நகரங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]