டெல்லி: எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு குறிப்பிட்ட 4 எதிர்க்கட்சிகளை மட்டுமே மத்தியஅரசு அழைத்துள்ள செயலானது, ஒற்றுமையாக உள்ள எதிர்க்கட்சிகளிடையே பிளவை ஏற்படுத்தும் சதிச்செயல் என மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற ராஜ்யசபாவில் கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, மரியாதைக்குறைவாக செயல்பட்ட 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மன்னிப்பு கேட்கும் வரை இடைநீக்கம் தொடரும் என அறிவித்த ராஜ்யசபா தலைவர், தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரிலும் பங்கேற்க அனுமதி மறுத்துள்ளார். இதை கண்டித்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல நாட்கள் அவை ஒத்தி வைக்கப் பட்டு, விவாதங்கள் நடைபெறாமல் உள்ளது.

குளிர்கால கூட்டத்தொடர் இன்னும் ஒரு வாரம் மட்டுமே  நடைபெற உள்ளதால், முழுமையாக அவையை நடத்தத மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் கட்சிகளில் குறிப்பிட்ட 4 கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்திக்க அழைத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ரௌத்,  இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்களின் காங்கிரஸ், திரிணமூல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனான கூட்டத்துக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி என்னை அழைத்தார். நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் நாளை (திங்கள்கிழமை) காலை 10 மணிக்குக் கூட்டம் நடைபெறும் என கூறினார் என்று தெரிவித்து உள்ளார்.

அதுபோல,  சிபிஎம் கட்சியின் கரீம், சிபிஐ-யின் விஸ்வம், எம்.பி.க்கள் இடைநீக்கம் தொடர்பான கூட்டத்திற்கான அரசாங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அழைப்பை விமர்சித்தார், இது ‘நியாயமற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது’ என கடுமையாக விமர்சித்தார்.

இதற்கிடையில், எதிர்க்கட்சி தலைவர்களை காலை 9.45 மணிக்கு நடைபெறும்  கூட்டத்துக்கு வரும்படி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்  பிரகலாத் ஜோஷி  ஒத்த சிந்தனையுடைய கட்சிகளில் குறிப்பிட்ட 4 கட்சிகளின் அவைத் தலைவர்களுடனான கூட்டத்துக்கு  அழைப்பு விடுத்துள்ளது சதிச் செயல் என்றார்.

12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகப் போராடினர். இதுகுறித்து பேச வேண்டுமென்றால், அனைத்து எதிர்க்க ட்சித் தலைவர்களையும் கூட்டத்துக்கு அழைத்திருக்க வேண்டும். அவ்வாறு  அழைக்காமல் 4 எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் கூட்டத்துக்கு அழைத்திருப்பது துரதிருஷ்டவசமானது, நியாயமற்றது. இது எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தும் சதியாக உள்ளது. இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையுடன் இருக்கின்றோம் என்று கூறியவர்,   பேச்சு வார்த்தைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்க வேண்டும் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்று தெரிவித்தார்.